சிவகங்கை அதிர்ச்சி: பிரதமர் கிராமச் சாலை திட்டத்தில் தரமின்றி அமைக்கப்பட்ட கண்மாய் தரைப்பாலம்!

By KU BUREAU

சிவகங்கை: பிரதமர் கிராமச் சாலைத் திட்டத்தில், கண்மாய் தரைப் பாலம் தரமின்றி அமைக்கப்பட்டதாகவும், அறிவிப்பு பலகை கூட வைக்கவில்லை எனவும், கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

சிவகங்கை அருகே பனங்காடியில் இருந்து சாத்தனி வரை 4 கி.மீட்டருக்கு சாலை மிகவும் மோசமாக இருந்தது. அப்பகுதி மக்களின் தொடர் வலியுறுத்தலை அடுத்து, பிரதமர் கிராமச்சாலைத் திட்டத்தில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இச்சாலையில், சாத்தனி கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதியில் தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

ஆனால், இந்த தரைப்பாலம் ஏற்கெனவே இருந்ததை விட 40 அடி குறைவாக அமைக்கப்பட்டது. அதோடு, பாலத்தையும் தரமின்றி அமைத்ததாகவும் புகார் எழுந்தது. மேலும், பிரதமர் கிராமச் சாலைத் திட்டத்தில் சாலை ஆரம்பிக்கும் இடத்தில் பணியின் முழு விவரம் அடங்கிய அறிவிப்பு பலகை வைத்த பின்னரே பணி தொடங்க வேண்டும். ஆனால், சாலை அறிவிப்பு பலகை வைக்கவில்லை.

இது குறித்து சாத்தனி கிராம மக்கள் கூறியதாவது: அறிவிப்பு பலகை வைக்காததால். சாலையின் நீளம், செலவு தொகை போன்ற விவரங்களை அறிய முடியவில்லை. மேலும், சாத்தனி கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதியில் சாலையை மூழ்கடித்து தண்ணீர் நிற்கும். எனவேதான் அங்கு தார் சாலை அமைக்காமல், தரைப்பாலம் அமைக்கின்றனர்.

ஆனால், தற்போது ஏற்கெனவே இருந்ததை விட குறைந்த நீளத்துக்கே பாலம் அமைத்துள்ளனர். மேலும், தற்போது மண் தரையில் அப்படியே கான்கிரீட் கலவையை கொட்டியுள்ளனர். இதனால் மழைநீர் தேங்கும்போது எளிதில் பெயர்ந்து விடும். அதிகாரிகளும் மேற்பார்வையிடுவது இல்லை. எனவே, முறையாக பணியை மேற்கொள்ள ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து கேட்பதற்காக ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, முறையான பதிலளிக்கவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE