அடிப்படை வசதிகள் இல்லாத ராமசாமிபட்டி ஆரம்ப சுகாதார நிலையம்: நோயாளிகள் புகார்

By KU BUREAU

ராமநாதபுரம்: கமுதி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி அருகே ராமசாமிபட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு ராமசாமிபட்டி, கோரைப்பள்ளம், கிளாமரம், கோபாலபுரம், அய்யனார்புரம், செட்டிகுளம், பாறைக்குளம், நெடுங்குளம், கணக்கி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு தண்ணீர் இன்றி காட்சிப் பொருளாக உள்ளது. கட்டிடத்தில் உள்ள மின் வயர்கள் சேதமடைந்துள்ளதால் அடிக்கடி மின்விபத்து ஏற்படுகிறது. குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின் விசிறிகள், மின் விளக்குகள், போதுமான இருக்கை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. பிரசவத்துக்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகள் இரவு நேரங்களில் அடிக்கடி மின்சார விநியோகம் தடைப்படுவதால் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து பலமுறை சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழுதான மின் வயர்களை மாற்றி அமைக்கவும், நோயாளிகளுக் கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE