திருவள்ளூர்: அரசு பள்ளி மாணவர்களிடம் கையெழுத்து கேட்டு மாணவர்களை வற்புறுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்
பாஜக சார்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் மத்தியில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற தலைப்பில் நேற்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக சில பள்ளி மாணவர்களிடமும் கையெழுத்து பெற்றதாக சொல்லப்படுகிறது.
திருவள்ளூரில் இது குறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ‘நமக்கான இருமொழி கொள்கையே போதும். அப்படி இருக்கையில் அரசு பள்ளிகளின் வாசலில் நின்றுகொண்டு, ஒரு போர்டினை வைத்துக்கொண்டு, பள்ளி மாணவர்களின் கையை பிடித்து இழுத்து கையெழுத்து போட வற்புறுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன். மாணவர்கள் அவர்களாக வந்து கையெழுத்து போட்டால் சரி. ஆனால், கையெழுத்து கேட்டு மாணவர்களை வற்புறுத்துவது, மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.
இதுபற்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து புகார் வந்தால் அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்
» பாஜகவின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து: அதிமுக முன்னாள் எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம்!