‘விஜய் கட்சி நிர்வாகிக்கு இந்தியாவில் எத்தனை தொகுதின்னுகூட தெரியல’ - புஸ்ஸி ஆனந்தை வறுத்த அண்ணாமலை!

By KU BUREAU

சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து யாரோ எழுதி கொடுக்குறாங்க. அப்புறம் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு விஜய் கட்சி சார்பாக வந்தவருக்கு இந்தியாவில் 543 தொகுதி இருக்கிறது என்பதே தெரியவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் அது தமிழகத்திற்குப் பெரிய சிக்கலாக இருக்கும் என்பது தொடர்பாக நேற்றைய முன் தினம் அனைத்து கட்சி கூட்டத்தைத் தமிழக அரசு நடத்தியிருந்தது. இதில் தமிழகத்தின் அதிமுக, பாமக, தவெக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். தொகுதி மறு சீரமைப்புக்கு எதிராக தவெக தலைவர் விஜய் கடுமையான கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த அனைத்து கட்சி கூட்டத்தைக் கடுமையாகச் சாடி வருகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “ தவெக தலைவர் விஜய்க்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து யாரோ எழுதி கொடுக்குறாங்க. அப்புறம் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு விஜய் கட்சி சார்பாக யாரோ ஒருத்தர் (தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்) வராங்க. அவங்களுக்கு இந்தியாவில் 543 தொகுதி இருக்கிறது என்பதே தெரியவில்லை. ஏதோ ஒரு எண்ணிக்கையை சொல்கிறார். பத்திரிகையாளர்கள் தான் மொத்தம் 543 தொகுதி என்றே சொல்றாங்க. விஜய் கட்சி சார்பாக வந்தவர் அப்புறம் தான் 543 தொகுதினு சொல்றார்.

இன்னொரு தலைவர் (மநீம தலைவர் கமல்ஹாசன்) 453 தொகுதிகள் என பேசியே முடித்துவிட்டார். அவர் பேசி முடித்ததற்கு பிறகு தான் அது 453 தொகுதிகள் இல்லை 543 தொகுதிகள் என்று சொல்றாங்க. அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு வந்த சில அரசியல் தலைவர்களுக்கு இந்தியாவில் எத்தனை எம்பிக்கள் இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை.

543 தொகுதிகள் இருக்கிறது என்று கூட தெரியாமலே சில கட்சிகள் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு வந்து வடை, பஜ்ஜி, போண்டா சாப்பிட்டு டீ குடித்துவிட்டு மோடிஜியையும், பாஜகவையும் திட்டிவிட்டு கிளம்பி வீட்டுக்கு போய்ட்டாங்க. இதுதான் அனைத்துக்கட்சி கூட்டத்தின் லட்சணம்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE