தமிழகத்தில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளன: டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்

By KU BUREAU

சென்னை: தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்கள் குறைந்துள்ளதாகவும், ரவுடிகளின் அட்டூழியம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் குற்றச்செயல் களை முற்றிலும் கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால், குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அந்த வகையில் 2023-ல் ஆதாயக் கொலைகள் 83 ஆக இருந்த நிலையில், 2024-ல் இது 75 ஆக (10%) குறைந்துள்ளது.

இதேபோல் கூட்டுக் கொள்ளை 2023-ஐ விட (133), 2024-ல் (110) 17 சதவீதம் குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் திருட்டு வழக்குகள் 10.65 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது 2023-ல் 17,788 ஆக இருந்த திருட்டு, 2024-ல் 15,892 ஆகக் குறைந்துள்ளது. மேலும், 2023-ல் கொலை, கொலை முயற்சி, கொலையாகாத மரணம் உள்ளிட்ட வகைகளில் 49,286 வழக்குகள் பதிவாகி இருந்தன.

அதே நேரத்தில் இந்த வழக்குகள் 2024-ல் 31,497 ஆக உள் ளன. இதனால், 2023-ஐ ஒப்பிடுகை யில் 2024-ல் 17,789 வழக்குகள் (36.12 சதவீதம்) குறைந்துள்ளன. இதேபோல் 2023-ல் 110 ஆக இருந்த கொலை வழக்குகள் 2024-ல் 63 வழக்காகக் குறைந்தன. இது 2023-ஐ ஒப்பிடும்போது 2024-ல் 47 வழக்குகள் அதாவது 47.72 சதவீதம் குறைவாகும். இதேபோல் 2023-ல் 3,694, 2024-ல் 4,572 சமூக விரோதிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கலவர வழக்குகளும் 5.8% (2023-ல் 1,305, 2024-ல் 1,229) குறைந்துள்ளன. தமிழக காவல் துறையின் முன்னெச்சரிக்கை மற்றும் ரவுடிகளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை காரணமாக 2024-ம் ஆண்டில் சொத்து மற்றும் மனித உடலுக்கு எதிரான குற்றங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. குறிப்பாக கொலை மற்றும் ஆதாயக் கொலைகள் குறைந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE