கோவை: மதுபான விற்பனை கடைகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என கூறிவிட்டு, 1,000 எப்எல்2 பார்களை தமிழக அரசு திறந்துள்ளது என, பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவோம் என கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்ததும், அதற்கு நேர் எதிராக மது விற்பனையை அதிகரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
படிப்படியாக மதுக்கடைகளை மூடும் வாக்குறுதி என்ன ஆயிற்று என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், மக்களும் கேள்வி கேட்க தொடங்கியதால், 500 டாஸ்மாக் மதுக்கடைகளை திமுக அரசு மூடியது. ஆனால், டாஸ்மாக் மதுக்கடைகள் மூடியிருக்கும் நேரங்களில் சட்டவிரோத மது விற்பனை நடப்பதை திமுக அரசும், காவல்துறையும் கண்டுகொள்வதில்லை.
இப்படி தமிழ்நாட்டில் எங்கும் மது நீக்கமற நிறைந்திருக்கும் நிலையில், அதிகம் மது விற்பனையாகும் இடங்களில், எப்எல்2 எனப்படும் சுமார் 1,000 தனியார் பார்களை திறக்க திமுக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த பார்களுக்கு டாஸ்மாக்தான் மதுபானங்களை விநியோகம் செய்கிறது. டாஸ்மாக் செயல்படும் நேரத்தைவிட எப்எல்2 பார்கள் கூடுதலாக இரண்டு மணி நேரம் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
» நெல்லையில் சாட்சியம் அளித்தவரை கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனை, 4 பேருக்கு ஆயுள்
» சாத்தான்குளம் தந்தை, மகன் கொலையில் எஸ்ஐ ஜாமீன் மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு
தனியுரிமை பெற்ற கிளப்புகளின் உறுப்பினர்கள் மது அருந்த மட்டுமே எப்எல்2 உரிமம் வழங்கப்படுகிறது. ஆனால் 1,000 பார்களுக்கு இந்த உரிமம் வழங்குவதால், கிளப் உறுப்பினர்கள் மட்டுமின்றி, யார் வேண்டுமானாலும் இந்த பார்களில் மதுபானங்களை வாங்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தினசரி நிகழ்வாகி விட்டது. இதற்கு டாஸ்மாக் மதுவும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களே காரணம்.
பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டுமானால், மது, போதை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும். எனவே, 1000 பார்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.