தமிழிசை சவுந்தரராஜன் கைது - திமுக அரசுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

By KU BUREAU

சென்னை: புதிய கல்விக் கொள்கைக்கு வலு சேர்ப்பதற்காக அமைதியான முறையில் பணியில் ஈடுபட்ட பா.ஜ.க வின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் அவர்களை கைது செய்தது ஜனநாயகத்தில் உகந்ததல்ல என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பா.ஜ.க வினர் புதிய கல்விக்கொள்கை குறித்து மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த அமைதியான முறையில் கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்ட போது தமிழக அரசு தடுத்ததும், தலைவர்களை கைது செய்ததும் முறையற்றது. கண்டி க்கத்தக்கது. தமிழக பாஜக-வினர் மாணவர்களின் அறிவுத்திறன் வளர, வருங்காலம் சிறக்க புதிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு மூலம் ஏற்படுத்த தொடங்கினர்.

அதாவது புதிய கல்விக்கொள்கை பற்றி, 3 ஆவது மொழியாக மாணவர்கள் அவர்கள் விரும்பும் எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம் என்பதை பற்றி குறிப்பிடும் வகையில் மாணவர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் மத்தியில் கையெழுத்து இயக்கத்தை நேற்றைய தினம் பாஜக தொடங்கி இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை, எம்ஜிஆர் நகரில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்ட தமிழக பாஜக-வின் மூத்த தலைவரும், முன்னாள் அளுநருமான தமிழிசை சவுந்தர ராஜன் அவர்களையும், நிர்வாகிகளையும், தொண்டர்களையும் காவல் துறையினர் தடுத்ததும் கைது செய்ய முயற்சித்ததும் ஏற்புடையதல்ல.

குறிப்பாக புதிய கல்விக் கொள்கைக்கு வலு சேர்ப்பதற்காக அமைதியான முறையில் பணியில் ஈடுபட்ட பாஜக-வின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களை தமிழக அரசு பணி செய்ய விடாமல் தடுத்து, கைது செய்ததுஜனநாயகத்தில் உகந்ததல்ல, கண்டிக்கத்தக்கது.

எனவே மக்கள் பணியாற்றக்கூடிய கட்சிகளிடமும், தலைவர்களிடமும் தமிழக அரசுக்கு ஒத்த கருத்து இல்லை என்றாலும் கூட அக்கட்சிகளை தடுக்க நினைப்பதும், தலைவர்களை கைது செய்வதும் முறையற்றது. தமிழக அரசு இதனை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE