தஞ்சாவூர்: சாலை விபத்தில் உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் உடல் உறுப்புகள் நேற்று தானம் செய்யப்பட்டன.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள கலைஞர் நகரைச் சேர்ந்தவர் கே.குருமாணிக்கம்(55). இவர், தஞ்சாவூர் குழந்தை கடத்தல் தடுப்பு காவல் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், மார்ச் 3-ம் தேதி யாகப்பா நகர் அருகில் குருமாணிக்கம் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால், பலத்த காயமடைந்த அவர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அன்று இரவு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன்வந்தனர்.
இதைத் தொடர்ந்து, நேற்று அறுவை சிகிச்சை மூலம் குருமாணிக்கத்தின் கண்கள், தோல் தானமாகப் பெறப்பட்டன. பின்னர், கண்கள் தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கும், தோல் மதுரையிலுள்ள தனியார் மருத்துவ மனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குருமாணிக்கத்தின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.