திருவாரூரில் ஆய்வினை தொடங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: திமுகவினர் உற்சாகம்

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் இன்று நாளையும் இரண்டு நாட்கள் பல்வேறு அரசு திட்டங்கள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார். அதை ஒட்டி இன்று காலை தனது ஆய்வு பணியை தொடங்கினார்.

திருவாரூர் அருகே, பழவனக்குடி ஊராட்சியில், 30 மகளிர் குழுக்களைச் சேர்ந்த பெண்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: கிராமப்புறங்களில் 3.3 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்களும், நகர்புறங்களில் 1.5 லட்சம் சுய உதவி குழுக்களும் சேர்த்து நான்கரை 4.5 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில், 54 லட்சம் மகளிர்கள் உறுப்பினர்களாக செயல்படுகிறார்கள். இவர்களுக்கு, ஒரு லட்சத்து ஐயாயிரம் கோடி ரூபாய் வங்கி கடன் பெற்றுக் கொடுத்துள்ளோம். வரும் மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் ரூ.3019 கோடி கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த நிலையில், மகளிர்க் குழு கடன்களை எந்த அளவுக்கு பயன்படுத்துகிறார்கள், கடன் மூலம் மகளிர் குழுவினரின் வாழ்வாதாரம் எந்த அளவுக்கு மேம்பட்டுள்ளது. ஏற்கனவே செயல்பட்டு வந்த மகளிர்குழு தற்போது செயல்படாமல் இருந்தால் அதன் காரணம் என்ன என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டுமென, என்னிடம் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதனடிப்படையில், மகளிர் குழுவை தொடங்கிய முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரிலிருந்து மகளிர் குழுவினரை சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

திருவாரூர் எஸ்.எஸ். நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

பழவனக் குடியில் நடைபெற்ற இந்த சந்திப்பு நிகழ்ச்சியில், 30 மகளிர் குழுவினரை சந்தித்தேன் மகளிர் குழு கடன் மட்டுமின்றி, கலைஞர் உரிமைத் தொகை திட்டம், இல்லம் தேடி மருத்துவத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களிலும் மகளிர்கள் அரசுக்கு உதவியாக செயலாற்றி வருவது குறித்து நன்றி தெரிவித்ததோடு, மகளிர் குழுவினர் பழவனக்குடியில் அரசு செய்து தரவேண்டிய பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் திருவாரூர் எம்எல்ஏவிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்றார்.

இந்த ஆய்வின்போது, அமைச்சர் டிஆர்பி.ராஜா, மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், எம்எல்ஏ பூண்டி கலைவாணன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் உடன் வந்தனர். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு திருவாரூர் எஸ் எஸ் நகரில் 43 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பிலான இருசக்கர வாகனங்கள் நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE