ராமநாதபுரம்: உச்சிப்புளி அருகே அம்மாபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மனைவி ஆறுமுகம் (70). இவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், தனது மகனிடம் இருந்து நிலத்தைப் பெற்றுத்தர வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷிடம் மனு அளித்தார்.
பின்னர் மூதாட்டி ஆறுமுகம் கூறும்போது: எனது கணவர் இறப்புக்கு முன்னதாக மகன்கள் நாகமுத்து, தவசிமுத்து ஆகியோருக்கு, 2 ஏக்கர் நிலத்தை எழுதி கொடுத்தார். அதில் நான் கேட்கும்போது எனக்கு 60 சென்ட் நிலத்தைத் தர வேண்டும் எனக் கூறினார். தற்போது நான் வருமானமின்றி பழைய வீட்டில் தனியாக வசிக்கிறேன். ரேஷன் அரிசியை வாங்கித்தான் வாழ்க்கையை நகர்த்துகிறேன்.
ஆனால், அதற்கு உப்பு, புளி, வாங்கக்கூட பணமில்லை. எனது கணவர் சொன்னபடி 60 சென்ட் நிலத்தை கேட்டால் மகன் நாகமுத்து 4 மாதங்களாகத் தருவதாகக் கூறி ஏமாற்றுகிறார். இது தொடர்பாக உச்சிப்புளி போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே எனது மகனிடம் இருந்து 60 சென்ட் நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்றார்.