விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருமுக்குளம் தெப்பத்தில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் இந்த ஆண்டு மாசி மக தெப்ப உற்சவம் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெப்பத்தின் சுற்றுச்சுவரை சீரமைக்க நிதி கேட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூர தேரோட்ட திருவிழா, பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி செப்பு தேரோட்டம், புரட்டாசி பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம், மாசி தெப்ப திருவிழா, பங்குனி திருக்கல்யாணம் ஆகியவை முக்கிய திருவிழாக்கள் ஆகும். கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய 3 நதிகளின் சங்கமமாக கருதப்படும் ஆண்டாள் கோயில் திருமுக்குளத்தில் மாசி மகம் அன்று தெப்பத் திருவிழா நடைபெறும்.
ஆனால் திருமுக்குளம் நிரம்பாதது, சுற்றுச்சுவர் சேதமடைந்தது உள்ளிட்ட காரணங்களால் 2016-ம் ஆண்டுக்கு பின்னர் தெப்பத் திருவிழா நடைபெறாமல் இருந்தது. தொடர்மழை காரணமாக திருமுக்குளம் நிரம்பியதால், கடந்த ஆண்டு மாசி மகத்தில் தெப்பத் திருவிழா 3 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெற்றது. 8 ஆண்டுகளுக்கு பின் தெப்பத் திருவிழா நடைபெற்றதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த ஆண்டு மார்ச் 12-ம் தேதி மாசி மகம் வருகிறது.
» ‘தமிழை வியாபாரமாக்கிய திமுக’ - தமிழிசை கைதுக்கு அண்ணாமலை கண்டனம்
» தொழில்நுட்ப கோளாறு; திருச்சியிலிருந்து 8 மணி நேரம் தாமதமாக சிங்கப்பூர் புறப்பட்ட விமானம்!
இந்நிலையில் தெப்பத்தில் தண்ணீர் குறைவாக உள்ளது, சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு தெப்பத் திருவிழா நடைபெறாது என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தெப்பத்தின் சுற்றுச் சுவர்களை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யுமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு பரிந்துரை செய்யபட்டு உள்ளது.
இதுகுறித்து செயல் அலுவலர் சர்க்கரையம்மாள் கூறுகையில், திருமுக்குளம் தெப்பத்தில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் இந்த ஆண்டு தெப்பத் திருவிழா நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும் தெப்பத்தின் சுற்றுச்சுவர்கள் சேதமடைந்து உள்ளன. ஏற்கெனவே தெப்பத்தின் ஒரு பக்க சுற்றுச்சுவரை ரூ.96 லட்சம் மதிப்பில் சீரமைக்க பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. தற்போது அதிகாரிகள் ஆய்வு செய்து தெப்பத்தின் நான்கு பக்க சுற்றுச் சுவர்களையும் சீரமைக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது, என்றார்.