எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்வி: பாசிட்டிவாக பதில் சொன்ன சசிகலா; மகிழ்ச்சியில் அதிமுக!

By KU BUREAU

திருவண்ணாமலை: விரைவில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி கண்டிப்பாக மலரும், இதில் சந்தேகமே இல்லை என சசிகலா கூறியுள்ளார்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேற்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பாக சிவாச்சாரியார்கள் பிரசாதங்கள் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, “தமிழ்நாட்டில் அரசு எவ்வாறு நடக்கிறது என்பது ஊர் அறிந்த விஷயம் தான், எல்லாருக்கும் தெரியும். திமுக அரசு சரிவர செயல்படவில்லை என்பது உண்மை.

தற்போது அரசிடம் எதற்கும் பணம் இல்லை, எதுவும் செய்ய முடியாது, மீதி காலத்தை எப்படியாவது ஓட்டியாக வேண்டும் .இதனால் தான் கூட்டணி கட்சிகளை அழைத்து தொகுதி சீரமைப்பை உடனே நிறுத்த வேண்டும் என்பதை பிரச்சார யுக்தியாக செய்து வருகிறது. மத்திய அரசை எதிர்க்க வேண்டும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக மத்திய அரசுடன் சண்டை போடுகிற நோக்கிலேயே இருப்பதால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மத்திய அரசுடன் சண்டை போடவா உங்களிடம் மக்கள் ஆட்சியை கொடுத்தார்கள்?

2026 தேர்தலுடன் அதிமுகவை எடப்பாடி பழனிசாமி மூடிவிடுவார் என்று திமுக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளாரே என செய்தியாளர் கேட்டதற்கு, “திமுகவினர் எங்களை வாழ்த்துவார்கள் என்றா நினைக்கிறீர்கள். அவர்கள் சொல்கிறபடி சொல்லிக்கொண்டே இருக்கட்டும். நாங்கள் வந்து காட்டுகிறோம் என நான் சொல்கிறேன். விரைவில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி கண்டிப்பாக மலரும், இதில் சந்தேகமே இல்லை” என சசிகலா கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE