குன்னூர் நகராட்சி தலைவியின் வளையலை திருட முயன்றேனா? - கவுன்சிலர் ஜாகிர் உசேன் விளக்கம்!

By KU BUREAU

நீலகிரி: குன்னூரில் நகராட்சி தலைவியின் வளையலை திமுக கவுன்சிலர் உருவ முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து கவுன்சிலர் ஜாகிர் உசேன் விளக்கமளித்துள்ளார்

முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு குன்னூர் அண்ணா சிலை அருகே நடந்த நிகழ்ச்சியில், இந்தி எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தபோது, நகராட்சி தலைவர் சுசீலா கையில் இருந்த வளையலை, கவுன்சிலர் ஜாகிர் உசேன் உருவ முயன்றார். இதனை பார்த்த அருகில் இருந்த மற்றொரு நிர்வாகி, அவரின் கையை தட்டிவிட்டார். ஓரிரு வினாடிகளில், சுசிலா கை மீது மீண்டும் தனது கையை வைத்த ஜாகிர் உசேன் வளையலை கழற்ற முயன்றார். உடனடியாக சுசீலா தனது கையை கீழே இறக்கினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் படுவைரலானது. இந்த வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, '' ஹிந்தி எதிர்ப்புப் போர்வையில், வளையலைத் திருடும் குன்னூர் நகர்மன்ற 25-வது வார்டு திமுக கவுன்சிலர் ஜாகிர் உசேன். திருட்டையும் திமுகவையும் எப்போதும் பிரிக்கவே முடியாது'' என விமர்சித்து உள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஜாகிர் உசேன், ‘நான் அந்த நிகழ்ச்சிக்கு தாமதமாக சென்றேன். நான் அங்கே நின்றபோது எனக்கு பின்னே நின்ற மகளிர் சிலர் மறைக்கப்பட்டனர். எனவே சகோதரியான நகராட்சி தலைவரை கையை பிடித்து இழுத்துவிட்டேன். இதனைவைத்து ட்ரோல் செய்து வளையல் திருடுகிறேன் என்று அவதூறு பரப்பிவிட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE