உடுமலை, மடத்துக்குளத்தை பழநியுடன் இணைக்க எதிர்ப்பு: மக்கள் ஆர்ப்பாட்டம்

By KU BUREAU

திருப்பூர்: பழக்கவழக்கங்களும், கலாச்சாரமும் வெவ்வேறானவை என்பதால், திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளை இணைத்து பழநி புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட உள்ளதாக எழுந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, தனித்தனியே ஆலோசனைக் கூட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

பழநியுடன் உடுமலை, மடத்துக்குளம் ஆகிய பகுதிகளை இணைத்து, பழநி மாவட்ட தலைநகராக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் பரவிய இத்தகவல் குறித்து, அரசு எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இதை கண்டிக்கும் வகையில், உடுமலை மக்கள் பேரவை சார்பில் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. உடுமலையிலுள்ள ஆளுங்கட்சி நிர்வாகிகள் சிலர், கூட்ட அரங்க நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டாம் என கூறியதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் தகவல் உண்மையாகதான் இருக்கும். எனவே, பொதுமக்களை திரட்டி வலுவான எதிர்ப்பை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக, உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட பொது செயலாளர் வடுகநாதன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளரான ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் எம்பி-யுமான கார்வேந்தன் பேசினார்.

மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதீஸ்வரி கந்தசாமி முன்னிலை வகித்தார். பழநியை மாவட்டமாக மாற்றுவதில் தவறில்லை. அதனுடன் உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளை இணைப்பது பெரும் சிக்கலுக்கு வழிவகுக்கும். அரசின் இந்த முயற்சிக்கு பாஜக கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. இத்திட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டங்களும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதேபோல், உடுமலை, மடத்துக்குளம் மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் நேற்று நடைபெற்ற கண்டன கூட்டத்துக்கு உடுமலை மாரியம்மன் கோயில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.ஸ்ரீதர், உடுமலை வியாபாரிகள் சங்க தலைவர் பாலநாகமாணிக்கம், செயலாளர் மெய்யானமூர்த்தி உட்பட பல்வேறு சமூக அமைப்புகளின் நிர்வாகிகள், வியாபாரிகள் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல் மாவட்ட மக்களின் பழக்கவழக்கங்களும், கலாச்சாரமும் வேறானது. மேற்கு மண்டலத்தில் நூற்றாண்டுகளாக இருந்து வரும் உடுமலை, மடத்துக்குளம் பகுதி மக்களின் கலாச்சாரமும், பழக்கவழக்கமும் வேறு. பல ஆண்டுகளாகவே உடுமலை, மடத்துக்குளம் பகுதி மக்களின் உறவுகள், வணிக தொடர்புகள் என அனைத்து தேவைகளுக்கும் கோவை, பொள்ளாச்சியை சார்ந்தே உள்ளன. எனவே, பழநியுடன் இணைக்கும் அரசின் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில்தான், ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பொதுமக்களின் கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன என்று, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே உடுமலை, மடத்துக்குளத்தை இணைத்து பொள்ளாச்சியை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என, சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் வலியுறுத்தியிருந்தார். அதேபோல், மடத்துக்குளம் தொகுதி உறுப்பினர் மகேந்திரனும் கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், அதுபோன்ற எந்த திட்டமும் இல்லை என பதில் அளித்திருந்தார். இந்த காணொலி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE