கோவை: பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டதால் விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு, 200 மாணவர்கள் பாதுகாப்பாக விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். வனத்துறையினர் தேடுதல் பணியை தொடங்கியுள்ளனர்.
கோவை மருதமலை அருகே மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது பாரதியார் பல்கலைக் கழகம். இங்கு விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு ஆசிரியர்கள் நேற்று காலை பயிற்சிக்காக மைதானத்துக்கு சென்றனர். அப்போது அங்கு சிறுத்தை நடமாடியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக பல்கலைக் கழக நிர்வாகத்திற்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விளையாட்டு போட்டியில் பங்கேற்க இருந்த 200 மாணவ, மாணவிகளும் பாதுகாப்பாக விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
பல்கலைக்கழக வளாகத்தில் நிர்வாக பணி அலுவலர்கள் தவிர்த்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர். சிறுத்தை நடமாட்டத்தை உறுதிப் படுத்திய வனத்துறையினர் தேடுதல் பணியை தொடங்கியுள்ளனர். கேமரா பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.