தமிழகத்துக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும்: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நம்பிக்கை

By KU BUREAU

தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்துக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்ய மத்திய அரசு நடவடிக்கைகளை, பணிகளை மேற்கொள்ளும் போது, தமிழகத்துக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதில் தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்துக்கும், பொதுமக்களுக்கும் மாற்றுக்கருத்து கிடையாது.

அப்படி ஒரு அதிகாரப்பூர்வமான முடிவை மத்திய அரசு எடுக்கும்போது விதிகள் வகுக்கப்படும். நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவந்து அதற்கான சட்டத்திருத்தங்கள், கோட்பாடுகள் மட்டுமில்லாமல் குழு அமைத்து வரையறை செய்ய ஏற்பாடு செய்யப்படும். எனவே, தமிழகத்தின் பிரதிநிதித்துவம் கூடுதலாக இருக்க வேண்டும் என்பதில் அனைவருக்கும் ஒருமித்த கருத்தே.

அதேநேரத்தில் மத்திய அரசு எந்த அறிவிப்பும் அறிவிக்காத நிலையில் அதற்கான எந்தப் பணியும் நடக்காத நிலையில் தமிழகத்துக்கு தொகுதிகள் குறையும் என்று உத்தேசமாக நினைப்பதும், கூறுவதும் ஏற்புடையதல்ல. குறிப்பாக, இந்தப் பிரச்சினையை உறுதியாக அணுக வேண்டுமே தவிர உத்தேசத்தின் அடிப்படையில் அணுகக்கூடாது. எனவே, தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்துக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதில் தமாகா உறுதியாக இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE