ஶ்ரீவில்லிபுத்தூரில் வாடகை கட்டிடத்தில் இயங்கும் ஆதி திராவிடர் நல விடுதி: மாணவர்கள் அவதி

By KU BUREAU

விருதுநகர்: ஶ்ரீவில்லிபுத்தூரில் அரசு ஆதி திராவிடர் நல பள்ளி மாணவர் விடுதி ஓராண்டுக்கும் மேலாக வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் நிலையில், ரூ.7.20 கோடியில் புதிய விடுதி கட்டும் பணி தாமதமாகி வருவதால் மாணவர்கள் சிரமத்தில் உள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோட்டைப்பட்டியில் ஆதி திராவிடர் நலத்துறை பள்ளி மாணவர் விடுதியில் 200-க்கும் அதிகமான மாணவர்கள் தங்கி பயின்று வந்தனர். விடுதி கட்டிடம் சேதமடைந்ததால், ரூ.7.20 கோடி மதிப்பில் புதிய விடுதி கட்ட, கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து 2023-ம் ஆண்டு அக்டோபரில் விடுதி தனியார் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு கட்டிடம் இடிக்கப்பட்டது. நவம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் 20 தங்கும் அறைகள், சமையலறை, உணவுக் கூடம், ஓய்வு அறை உள்ளிட்ட தரைத்தளத்துடன் சேர்த்து 4 தளங்களுடன் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் விடுதியின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த, அப்போதைய ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் கயல் விழி, பணிகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட தொய்வு காரணமாக வேறு ஒப்பந்ததாரருக்கு பணிகள் மாற்றப்பட்டன. மே மாதத்துக்குள் பணிகளை முடிக்க வேண்டிய நிலையில், 3-வது தளம் கட்டுமானப் பணிகள் தற்போது தான் தொடங்கி உள்ளன.

கட்டுமானப் பணிகளில் ஏற்படும் தாமதம் காரணமாக வரும் கல்வியாண்டில் விடுதி பயன்பாட்டுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தனியார் கட்டிடத்தில் இட நெருக்கடி மற்றும் போதிய வசதிகள் இல்லாததால், மாணவர்கள் எண்ணிக்கை 120-ஆக குறைந்துள்ள நிலையில், விடுதி கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE