சேலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.300 ஆக சரிவு - விவசாயிகள் கவலை

By KU BUREAU

சேலம்: பூக்கள் விளைச்சல் அதிகரிப்பு, முகூர்த்த தேவை இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், சேலம் வஉசி சந்தையில் நேற்று பூக்களின் விலை குறைவாக இருந்தது. குண்டுமல்லி கிலோ ரூ.300-க்கு விற்பனையானது.

சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி, ஓமலூர், பூசாரிப்பட்டி, வீரபாண்டி, அயோத்தியாப்பட்டணம், வலசையூர், வீராணம், கூட்டாத்துப்பட்டி உள்பட பல்வேறு இடங்களில், பல வகையான பூக்கள் அதிகபரப்பில் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு விளைவிக்கப்படும் பூக்களும், சேலத்தின் அண்டை மாவட்டங்களான நாமக்கல், தருமபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் விளைவிக்கப்படும் பூக்களும் சேலம் வஉசி தினசரி சந்தைக்கு மொத்த விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் வரை பூக்கள் வரத்து அதிகமாக இருந்ததால், அவற்றின் விலை அதிகமாக இருந்தது. தற்போது, பூக்கள் வரத்து அதிகமாக இருக்கும் நிலையில், அவற்றின் விலை நேற்று குறைவாக இருந்தது.

இது குறித்து பூ வியாபாரிகள் கூறியது: வஉசி சந்தையில் சேலம் மட்டுமல்லாது, பிற மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை கொள்முதல் செய்கின்றனர். எனவே, இங்கு விவசாயிகள் அதிகளவில் பூக்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக தொடர் மழை, பின்னர் கடும் பனி என்ற நிலை இருந்தது.

இதனால், செடியில் இருந்து பூக்கள் மொட்டு விடுவது குறைவாகவும், மொட்டுகள் மலரும் முன்னரே மழையில் உதிர்ந்துவிடும் என விளைச்சல் பாதிப்பு இருந்தது. பனிக் காலத்தில் குண்டு மல்லி, சன்னமல்லி வகை பூக்கள் விளைச்சல் குறைவாகவே இருக்கும். இதுபோன்ற காரணங்களால், குண்டு மல்லி உள்பட பெரும்பாலான பூக்களின் விளைச்சல் குறைவாக இருந்தது. இந்நிலையில், முகூர்த்த நாட்களால் தேவை அதிகமாக இருந்தபோது, குண்டு மல்லி கிலோ ரூ.2,500 வரை விற்பனையானது.

தற்போது, கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், குண்டு மல்லி உள்பட மற்ற பூக்களின் விளைச்சலும் அதிகரித்து, சந்தைக்கு வரத்து அதிகமாக உள்ளது. இதனிடையே, முகூர்த்த நாள் இல்லாததால், பூக்களின் விற்பனை இன்று (4-ம் தேதி) குறைவாக இருந்தது. எனவே, அவற்றின் விலையும் சரிந்தது. நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவாக, குண்டு மல்லி மற்றும் சன்னமல்லி ஆகியவை கிலோ ரூ.300-க்கு விற்பனையானது. இதேபோல், ஜாதி மல்லி ரூ. 300-க்கும், சம்பங்கி, காக்கட்டான் ரூ.60-க்கும், வெள்ளை அரளி ரூ.40-க்கும், செவ்வரளி ரூ.150-க்கும், நந்தியாவட்டம் ரூ.20-க்கும், சின்ன நந்தியாவட்டம் ரூ.200-க்கும் விற்பனையானது. முகூர்த்த நாட்கள் வரும்போது பூக்கள் விலை உயரும், என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE