சென்னை: தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 56 கட்சிகள் பங்கேற்றன, 5 கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.
பங்கேற்ற கட்சிகள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்துக்கு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள தமிழக கட்சிகள் அனைத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 56 கட்சிகள் பங்கேற்றன. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், தமிழக வெற்றிக் கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, மூவேந்தர் முன்னேற்றக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.
மேலும், அமமுக, தேமுதிக, எஸ்டிபிஐ, தமமுக, ஐஜேகே, பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய குடியரசு கட்சி, ஆம் ஆத்மி கட்சி என மொத்தமாக 56 கட்சிகள் பங்கேற்றன.
அதிமுக சார்பில் ஜெயக்குமார், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், விசிக சார்பில் திருமாவளவன், இடதுசாரிகள் சார்பில் முத்தரசன், பெ.சண்முகம், மதிமுக சார்பில் வைகோ, காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, மநீம சார்பில் கமல்ஹாசன், தவெக சார்பில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
» தொகுதி மறுவரையறை தென்மாநிலங்களுக்கான தண்டனை: அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் பேச்சு!
புறக்கணித்த கட்சிகள்: பாஜக, நாம் தமிழர் கட்சி, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தன.