திண்டுக்கல்: பழநியில் நீதிமன்றம் உத்தரவுப்படி விபத்து இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
பழநியை அடுத்த சின்னாரக் கவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (60). இவர் 2018-ல் பழநி - தாராபுரம் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ராமசாமி பலத்த காயமடைந்தார். இந்த விபத்து தொடர்பான வழக்கு பழநி கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. கடந்த 2022-ல் விபத்து இழப்பீடாக ரூ.3 லட்சத்து 51 ஆயிரத்து 818 வழங்க போக்குவரத்து கழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், நீதிமன்றம் குறிப்பிட்ட காலத்தில் இழப்பீடு எதுவும் வழங்காததால் ராமசாமி குடும்பத்தினர் , 2024-ல் நிறைவேற்றுதல் மனுவை தாக்கல் செய்தனர். அவ்வழக்கை விசாரித்த பழநி கூடுதல் சார்பு நீதிபதி பாரதி, வட்டியுடன் சேர்த்து ரூ.5 லட்சத்து 19 ஆயிரத்து 196 வழங்கவும், இல்லையெனில் பேருந்தை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார். அதன்படி, பழநி பேருந்து நிலையத்தில் திருச்செந்தூர் செல்வதற்காக நின்றிருந்த அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.