சென்னை: தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்வதுதான் மாணவர்களின் எதிர்காலத்துக்கு பயனளிக்கும். மொழியையும் திணிக்க முயற்சிப்பது அவர்களுக்கு சுமையாகவே அமையும் என, பாஜக மூத்த தலைவர் தமிழிசையின் பதிவை மேற்கோள்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய மடலில் கூறியிருப்பதாவது: எனது பிறந்தநாளில் பாஜக நிர்வாகியான தமிழிசை எனக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு என மும்மொழியில் வாழ்த்தி இருக்கிறார். இதில் ‘இந்தி’ இடம்பெறவில்லை. அதுதான் தமிழகத்தில் நிலவும் உணர்வின் வெளிப்பாடு. எனக்கு தெலுங்கு தெரியாது.
தெலங்கானா மாநில ஆளுநராக இருந்த தமிழிசை தெலுங்கு மொழியை அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், அவர் தெலுங்கு மொழியைப் பள்ளிப் பருவத்திலேயே படித்து அதனைத் தெரிந்துகொள்ளவில்லை. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தில் பணியாற்றியதால், பழக்கத்தின் மூலமாக அறிந்து கொண்டிருக்கிறார். இதிலிருந்தே, மூன்றாவதாக ஒரு மொழியை வலிந்து படிக்க வேண்டியதில்லை என்பதையும், தேவைப்படுகிறவர்கள் அதனைப் புரிந்து கொண்டு பயன்படுத்த முடியும் என்ற தமிழகத்தின் உணர்வை தமிழிசை உறுதிப்படுத்தியுள்ளார். அவருக்கு என் நன்றி.
செயற்கை நுண்ணறிவுத் துறையின் முன்னேற்றமும், ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு எழுத்தாகவும் குரலாகவும் மாற்றக்கூடிய வாய்ப்பும் எளிய முறையில் எல்லாரும் பயன்படுத்தும் வகையில் கைபேசிகளிலேயே பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. கூகுள் டிரான்ஸ்லேட், சேட் ஜிபிடி போன்ற தொழில்நுட்பங்கள் மொழிச் சிக்கல்களை மனிதர்கள் எளிதாகக் கடப்பதற்கு உதவுகின்றன. அச்சிடப்பட்ட காகிதத்தை எழுத்துருக்களாக மாற்றவும் ஒரு மொழியின் ஒலிப்பதிவை மற்றொரு மொழிக்கு மாற்றவும் வசதிகள் வந்துவிட்டன.
» வங்கிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்
ஒவ்வொரு மொழிக்கும் தேவையான தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்வதுதான் மாணவர்களின் எதிர்காலத்துக்கு பயனளிக்கும். அதற்குப் பதிலாக, ஒவ்வொரு மொழியையும் மாணவர்களிடம் திணிக்க முயற்சிப்பது அவர்களுக்கு சுமையாகவே அமையும். இதை கல்வியாளர்கள் உள்ளிட்ட அறிவியல் பார்வை கொண்ட பலரும் தெரிவிக்கின்றனர். அறிவியலைப் புறக்கணிக்கும் கட்சியான பாஜகவும் அதன் நிர்வாகிகளும் மொழித் திணிப்பைக் கட்டாயமாக்குகிறார்கள்.
ஒருவர் விரும்புகிற எந்த மொழிக்கும் நாங்கள் எதிரிகளல்ல. எந்த மொழியையும் எங்கள் மீது திணிக்காதீர்கள் என்பதைத்தான் சொல்கிறோம். மத்திய பாஜக ஆட்சியாளர்களின் நோக்கம் ஏதேனும் மூன்று மொழி என்பதல்ல. தமிழகத்தில் ஆதிக்க இந்தியையும் சம்ஸ்கிருதத்தையும் கட்டாயமாகத் திணிக்க வேண்டும் என்பதுதான்.
திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் மட்டும் இந்தி கற்றுத்தரப்படுகிறது என்று விமர்சனம் செய்கின்றனர். பரம்பரை பரம்பரையாகவே கல்வி வியாபாரம் செய்யும் பாஜக குடும்பத்தினர் பற்றிய பட்டியலை வெளியிட்டு பதிலுக்குப் பதில் பேசுவது நமது நோக்கமல்ல. உரிய அனுமதியுடன் யார் வேண்டுமானாலும் பள்ளிக்கூடங்களை நடத்த முடியும். மாநில அரசின் பாடத்திட்டத்தின்கீழும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழும் உரிய அனுமதியுடன்தான் திமுகவினர் உள்ளிட்ட பலர் பள்ளிகளை நடத்துகின்றனர். தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தி இருப்பதற்கு காரணம் மத்திய அரசின் கல்விக்கொள்கைதான். இதற்கு திமுகவினர் உட்பட வேறு யாரும் தனிப்பட்ட முறையில் காரணமாக மாட்டார்கள்.
தமிழக அரசின் பாடத்திட்டத்தின்கீழ் செயல்படும் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகளில் மும்மொழித் திட்டம் கிடையாது. பாஜக ஆட்சி செய்யும் இந்தி பேசும் மாநிலங்களில் அரசுப் பள்ளிகளைவிட, தமிழகத்தில் இருமொழிக் கொள்கை வழியிலான அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் தரம் உயர்ந்தே இருப்பதை மத்திய அரசின் புள்ளிவிவரங்களே தெரிவிக்கின்றன. மாணவர்களின் மீது மொழித் திணிப்பு எனும் சுமையை ஏற்றாமல், திறன் மேம்பாடு என்கிற வாய்ப்பை வழங்குவதுதான் திராவிட மாடல் அரசின் கல்வித் திட்டம்.
வள்ளுவர் சிலையை கங்கை கரையில் நிறுவுவதாகச் சொல்லி குப்பை மேட்டில் போட்டவர்களா தமிழ் கற்றுத் தருவதற்கான அமைப்பை நிறுவப் போகிறார்கள், கோட்சேவை பின்பற்றும் இயக்கத்தினர் காந்தியின் நோக்கத்தை நிறைவேற்ற மாட்டார்கள். தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பதுதான் அவர்களின் ரகசியத் திட்டம். அதை வெளிப்படையாக எதிர்க்கும் வலிமை கொண்டதுதான் திராவிட இயக்கம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.