ஆலங்குளம் அருகே கல் குவாரியால் கிராமங்கள் பாதிப்பு: மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் புகார்

By KU BUREAU

தென்காசி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

கடையநல்லூர் அருகே போகநல்லூரில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்கள் அளித்த மனுவில், ‘போகநல்லூர் முகாமில் 120 குடும்பங்களைச் சேர்ந்த 358 பேர் வசித்து வருகின்றனர். முகாம் அருகில் உள்ள குப்பைக் கிடங்கில் தென்காசி, கடையநல்லூர் பகுதி குப்பை கொட்டப்படுகிறது. மாலை நேரத்தில் குப்பையில் தீ வைப்பதால், முகாமில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

அங்கு பாதாளச் சாக்கடை கழிவுநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கழிவுநீர் போகும் பாதையில்தான் குடிநீர் குழாய் உள்ளது. குடிநீர் குழாய் உடைந்து 2 நாட்களாக தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும், குடிநீரில் கழிவுநீர் கலக்கும் நிலை உள்ளது’ என்று கூறி மனு அளித்தனர்.

சங்கரன்கோவில் வட்டம், தன்னூத்து கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு அளித்தனர். அதில், ‘எங்கள் பகுதிக்கு தாமிரபரணி குடிநீர் சரியாக வருவதில்லை. ஊராட்சி, ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

இடுகாட்டில் தண்ணீர் பிரச்சினை: திராவிட தமிழர் கட்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மதன் தலைமையில் ஏராளமானோர் இடுகாட்டுக்கு செல்வதுபோல் சங்கு ஊதியபடி வந்து மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில், ‘சங்கரன்கோவில் வட்டம், வென்றிலிங்கபுரம் கிராமத்தில் 100 குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் இடுகாடு இல்லாததால் ஊருக்கு வெளியில் இறப்பு காரியங்களைச் செய்து வருகின்றனர். அங்கு தண்ணீர் வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, தண்ணீர் வசதியுடன் இடுகாடு அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

குவாரிக்கு எதிர்ப்பு: தென்காசி தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் பழனி சங்கர் தலைமையில் ஏராளமானோர் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க திரண்டு வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார், நிர்வாகிகள் சிலர் மட்டும் ஆட்சியரிடம் மனு அளிக்க செல்ல அனுமதித்தனர். அவர்கள் அளித்துள்ள மனுவில், ‘ஆலங்குளம் அருகே புதுப்பட்டி, காசிநாதபுரம் கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமங்களுக்கு அருகே புதிதாக கல்குவாரி அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கு கல்குவாரி அமைந்தால் அந்த கிராமங்களில் உள்ள ஆடு, மாடு மேய்ப்பர்களுக்கும், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே, கல் குவாரிக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

கூட்டத்தில், 10 பயனாளிகளுக்கு தலா ரூ.8,500 வீதம் ரூ.85,000 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலிகளை ஆட்சியர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்துராமலிங்கம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஷேக்அயூப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE