ரூ.4,500 லஞ்சம் வாங்கிய மின் வாரிய பெண் ஊழியருக்கு 3 ஆண்டுகள் சிறை: குடந்தை நீதிமன்றம் தீர்ப்பு

By KU BUREAU

தஞ்சாவூர்: மின் இணைப்புக்கான பெயரை மாற்றம் செய்ய ரூ.4,500 லஞ்சம் வாங்கிய மின் வாரிய பெண் ஊழியருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

தஞ்சாவூர் விளார் சாலை நாவலர் நகரைச் சேர்ந்தவர் மனோகரன் (42). இவரது உறவினர் பத்மினி 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ம் தேதி நாஞ்சிக்கோட்டை சாலை வசந்தபுரி நகரில் புஷ்பவள்ளி என்பவரிடம் இருந்து ஒரு வீட்டை வாங்கி, வசித்து வருகிறார். 2022-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி பத்மினி வாங்கிய வீட்டின் மின் இணைப்பின் பெயரை மாற்றம் செய்வதற்காக மனோகரன் நாஞ்சிக்கோட்டை சாலை ஈ.பி.காலணியில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.

அங்கு பணியில் இருந்த தஞ்சாவூர் மானோங்கோரை பகுதியைச் சேர்ந்த மின் கணக்கீட்டாளர் தேன்மொழி (53) என்பவரிடம் மின் இணைப்பு பெயர் மாற்றம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர் வீட்டின் ஆவணங்களுடன் ரூ.4,500 லஞ்சமாக கொடுக்கும்படி கேட்டுள்ளார். ஆனால், மனோகரன் மின் இணைப்பின் பெயர் மாற்றத்துக்கு 2022 ஜூலை 11ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அதற்கான ரசீதின் நகல் மற்றும் வீட்டுக்கான ஆவணங்களுடன் மீண்டும் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அப்போது, மனோகரன் கொடுத்த அனைத்து ஆவணங்களையும் பார்வையிட்ட தேன்மொழி, ரூ.4,500 லஞ்சம் கொடுத்தால் தான் பெயர் மாற்றம் செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.

எனினும், லஞ்சம் கொடுக்க விரும்பாத மனோகரன் அளித்த புகாரின்பேரில், தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அறிவுரையின்படி ரசாயணம் தடவிய ரூ.4,500 பணத் தாள்களை மனேகரனிடம் இருந்து தேன்மொழி பெற்ற போது, லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக அவரை கைதுசெய்தனர்.

இது குறித்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில், தேன் மொழிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE