நீலகிரி: வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக குன்னூரில் இருந்து உதகைக்கு புதிய டீசல் இன்ஜின் மூலமாக மலை ரயில் இயக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நூற்றாண்டுகள் கடந்தும் ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட மலை ரயில், பழமை மாறாமல் தற்போதும் இயங்கி வருகிறது. இந்த மலை ரயிலில் பயணம் மேற்கொள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள் நாட்டினரும் முன்பதிவு செய்து காத்திருந்து பயணம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் இருந்து 30-க்கும் மேற்பட்டோர் மலை ரயிலில் பயணிக்க குன்னூர் வந்தனர்.
ஆனால், குன்னூரில் இருந்து உதகைக்கு சாதாரண டீசல் இன்ஜின் இயக்கப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக மேட்டுப் பாளையத்தில் இருந்து டீசலில் இயங்கும் புதிய எக்ஸ் கிளாஸ் நீராவி இன்ஜின் வரவழைக்கப்பட்டது. இனி வரும் கோடை சீசனுக்கும், இதே இன்ஜினை வைத்து மலை ரயிலை இயக்க வேண்டும் என, சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.