தென்காசி: குற்றாலம் அருகே ஓடும் காரில் திடீரென தீப்பிடித்த நிலையில், அதில் பயணம் செய்த 2 பேர் உடனடியாக கீழே இறங்கி உயிர் தப்பினர்.
கேரள மாநிலம், கொல்லம் பகுதியைச் சேர்ந்த அப்துல் சலாம் என்பவரது மகன் ஆதில். இவர், நேற்று முன்தினம் தனது விலை உயர்ந்த சொகுசு காரில் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் அமல் என்பவருடன் தென்காசி மாவட்டம், குற்றாலத்துக்கு வந்தார். இருவரும் நேற்று அதிகாலையில் குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம் அருவிக்கு சென்று விட்டு, திரும்பினர். அப்போது காரில் இருந்து புகை வந்ததை பார்த்து ஆதில் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக தனது காரை சாலையோரம் நிறுத்திவிட்டு, காரில் இருந்து ஆதில், அமல் ஆகிய இருவரும் வேகமாக இறங்கினர். அவர்கள் கீழே இறங்கிய சிறிது நேரத்தில் காரில் தீ வேகமாக பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதில் தென்காசி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக தீயணைப்பு படையினர் விரைந்து சென்று, தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. குற்றாலம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.