மாட்டுத்தாவணி மார்க்கெட்டை சுற்றிலும் தேக்கமடையும் குப்பைகள்; மதுரையில் சுகாதார சீர்கேடு

By KU BUREAU

மதுரை: மாட்டுத்தாவணி பழ மார்க்கெட், காய்கறி மார்க்கெட்டை சுற்றிலும் கால்வாய்களில் குப்பை தேங்கி கழிவு நீர், மழைநீர் செல்ல முடியாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் மக்கள், வியாபாரிகள் அதிகம் கூடும் இடமாக மாட்டுத் தாவணி காய்கறி மற்றும் பழ மார்க்கெட் உள்ளது. நாடு முழுவதும் இருந்து இங்கு பழங்கள், காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. தினமும் ஆயிரக் கணக்கான மக்கள், சிறு, குறு வியாபாரிகள் வந்து காய்கறிகள், பழங்களை வாங்கி செல்கிறார்கள். இந்த மார்க்கெட்டில் வாடகை வசூல் செய்யும் மாநகராட்சி, முறையாக அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்று வியாபாரிகள் சமீப காலமாக குற்றம் சாட்டுகிறார்கள்.

இரு சக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் பெறும் மாநகராட்சி, அதனை விடுவதற்கு பாதுகாப்பான காலி இடம் மார்க்கெட் வளாகத்தில் இல்லை. கண்காணிப்பு இல்லாததால் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் திருடு போகின்றன. குப்பை அன்றாடம் அள்ளப்படாமல் மார்க்கெட் வளாகத்தில் தேக்கமடைகின்றன. மார்க்கெட்டை சுற்றிலும் உள்ள கால்வாயில் குப்பை தேங்கி கழிவுநீர் செல்ல வழியில்லை. அதனால், ஒரு நாள் மழை பெய்தாலே மார்க்கெட் வளாகத்தில் துர்நாற்றம் வீசுகிறது.

சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர். மாநகராட்சி ஆணையர் இந்த மார்க்கெட்டை ஆய்வு செய்து, மார்க்கெட்டுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும், கால்வாயில் தேங்கி கிடக்கும் குப்பையை அள்ளுவதற்கும், தினமும் குப்பை பராமரிப்பு மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE