ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்ததால் அதிமுக ஒன்றிய செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம்

By KU BUREAU

வத்தலக்குண்டு அதிமுக ஒன்றியச் செயலாளர் மோகன், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள எம்.வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் மோகன். கடந்த 25 ஆண்டுகளாக வத்தலக்குண்டு ஒன்றிய அதிமுக செயலாளராகவும், தற்போது பிரிக்கப்பட்ட கிழக்கு ஒன்றியச் செயலாளராகவும் செயல்பட்டு வந்தார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டபோது, மோகனின் மகன் அருண்குமார் ஓபிஎஸ் ஆதரவாளராகச் செயல்பட்டு வந்தார். ஆனால், மோகன் பழனிசாமிக்குஆதரவு அளித்து வந்தார்.

சமீபத்தில் மோகன் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார். அவரை மோகன், அவரது மகன் அருண்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதையடுத்து, மோகனை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் என வத்தலக்குண்டு பகுதி அதிமுகவினர் குரல் எழுப்பினர்.

இந்நிலையில், அதிமுக ஒன்றியச் செயலாளர் மோகன் நேற்று திடீரென தனது ஆதரவாளர்களுடன் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்குச் சென்று, அவருக்கு ஆதரவு தெரிவித்தார். இதையறிந்த கட்சித் தலைமை அவசரம் அவசரமாக மோகனை கட்சியில் இருந்து நீக்கி அறிக்கை வெளியிட்டது.

தேனியில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்துக்கு பழனிசாமி வருகை தருவதற்கு முன்னதாகவே, அதிமுக ஒன்றியச் செயலாளர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சென்றது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE