நான் படித்த பள்ளியில் 3 மொழிகள்; தற்போது தெலுங்கு கற்றுக்கொள்கிறேன்: அண்ணாமலை

By KU BUREAU

தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இந்தியா-இலங்கை கூட்டு பணிக் குழுக் கூட்டம் விரைவில் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்பு நடக்கும்போது தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் வராது. தொகுதி மறுவரையறை என்பது விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என பிரதமரும், உள்துறை அமைச்சரும் தெளிவுபடுத்தி உள்ளனர். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்டினால், நாங்கள் அறிவாலய வாயிலில் இருந்து தலைமைச் செயலகத்துக்குச் சென்று கூட்டத்தில் பங்கேற்போம்.

திமுக தலைவர்களுக்கு என்னை திட்டுவதுதான் முதல் வேலை. யார் அதிகமாகத் திட்டுவது என்பதில்தான் அவர்களுக்குள் போட்டி. மேடையை அமைத்து பிரதமரை திட்டுவது, பாஜகவை திட்டுவது ஆகியவற்றை மட்டுமே முழுநேர வேலையாக திமுகவினர் வைத்துள்ளனர்.

இலங்கையில் புதிய அதிபர் வந்த பிறகு கைதுகள் அதிகரித்துள்ளன. மீனவப் பிரச்சினையை எல்லைப் பிரச்சினையாக அணுகாமல் மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என்று இலங்கை அரசிடம் இந்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக நான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்துக்கு, அவர் எழுதிய பதில் கடிதத்தில் இந்தியா-இலங்கை கூட்டுப் பணிக் குழு கூட்டம் விரைவில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

நான் படித்த பள்ளியில் 3 மொழிகள் கற்றுத் தரப்பட்டன. நான் தாய் மொழி தமிழை எடுத்துப் படித்தேன். 26 வயதில் கன்னடமும், இந்தியும் கற்றுக் கொண்டேன். தற்போது தெலுங்கு கற்றுக்கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE