பழநியுடன் இணைந்து உடுமலை புதிய மாவட்டம் ? - சமூக வலைதள தகவலால் மக்கள் குழப்பம்

By KU BUREAU

உடுமலை புதிய மாவட்டமாக உதயமாகிறதா? அல்லது பழநியுடன் இணைக்கப்படுகிறதா? என சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் தகவல், பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை, மடத்துக்குளம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளை பழநியுடன் இணைத்து புதிய மாவட்டம் உருவாக போவதாகவும், அரசு அதற்கான நடவடிக்கைகளை மறைமுகமாக மேற்கொண்டு வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், உடுமலையை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தும், சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பழநியுடன் இணைக்க வேண்டும் என்ற கருத்துக்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளனர். இந்த தகவல் உண்மையா?, தவறான தகவல் பரப்பப்படுகிறதா? என உடுமலை மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக உடுமலை வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. செயல் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். செயலாளர் மெய்யானமூர்த்தி முன்னிலை வகித்தார். ஏராளமான வியாபாரிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறும்போது, "திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளை இணைத்து, புதிய மாவட்டமாக பழநி அறிவிக்கப்பட இருப்பதாக வெளியாகி வரும் தகவல் மக்களிடமும், வியாபாரிகளிடமும் கடும் குழப்பத்தையும், தேவையற்ற அச்சத்தையும் உருவாக்கி வருகிறது. இதுகுறித்து அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். பழநியுடன் உடுமலை இணைக்கப்படுமேயானால், அதற்கு உடுமலை, மடத்துக்குளம் வட்டார மக்களும், வியாபாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவிப்பர் என்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற முறையில் பரப்பப்படும் கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தவறான தகவலை பரப்புவோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE