“மொழியை வைத்து இனியும் பிரிவினை அரசியலை நடத்த முடியாது!” - வானதி சீனிவாசன்

By KU BUREAU

மொழியை வைத்து பிரிவினை அரசியலை இனியும் நடத்த முடியாது என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'தேசிய கல்வி கொள்கை 2020' நெகிழ்வுத் தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. தாய்மொழி, ஆங்கிலம், மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு மொழியை படிக்கலாம் என்று கூறுகிறது. எந்த மாநிலத்தின் மீதும், எந்த மொழியையும் திணிக்கவில்லை. இது தெரிந்தும், தமிழ்நாட்டின் மீது மத்திய இந்தி மொழியை திணிப்பதாக, தினந்தோறும் தொண்டர்களுக்கு கடிதம் என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்.

உத்தரப்பிரதேசம், பிஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஹரியாணா, ராஜஸ்தான் என இந்தியை ஆட்சி மொழியாகக் கொண்ட மாநிலங்களின் பூர்வீக மொழிகள் சிதைக்கப்பட்டு, அழிக்கப்பட்டதாக விஷமப் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார். பாஜகவை பொறுத்தவரை இந்திய மொழிகள் அனைத்தும் சமம். அதனால்தான் மூன்றாவது மொழியை தேர்வு செய்யும் உரிமையை அந்தந்த மாநிலங்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் இருக்கும் மும்மொழி படிக்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளிகளில் மட்டும் மறுக்கப்படுவது ஏன்? தமிழ்நாடு அரசின் இரு மொழிக் கொள்கை என்பது அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் தானா? திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தி உள்ளிட்ட மொழிகள் கற்பிக்கப்படுவது ஏன் ?

இருமொழி கொள்கையால்தான் தமிழ்நாடு வளர்ந்துள்ளதாக திமுகவினர் பிரச்சாரம் செய்கின்றனர். அப்படியெனில் மும்மொழிக் கொள்கையை பின்பற்றிய கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கோவா, குஜராத், ஹரியாணா, டெல்லி போன்ற மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தது எப்படி ?

திராவிட மாடல் என்று சொல்கிறது திமுக. ஆனால், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற திராவிட மொழிகளை மூன்றாவது மொழியாக கற்கக்கூட மறுப்பது ஏன்? தமிழ்நாடு அரசே உருது மொழி பள்ளிகளை நடத்தும்போது, திராவிட மொழிகளுக்கு மட்டும் தடை விதிப்பது ஏன்? மொழியை வைத்து பிரிவினை அரசியலை இனியும் நடத்த முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE