மாற்றுத் திறன் மாணவர்களுக்கு பொதுத் தேர்வில் சலுகைகள்

By KU BUREAU

மாற்றுத் திறனாளிகள், விபத்துகளால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வில் கூடுதல் நேரம் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும் என்று தேர்வு துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வு துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பொதுத் தேர்வு மார்ச் 3-ம் தேதி (நாளை) தொடங்க உள்ளது. தேர்வில் பங்கேற்கும் தகுதியான மாற்றுத் திறன் தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் போன்ற சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

அவர்கள் சலுகை கோரியும் உரிய ஆணைகள் பெறப்படாத பட்சத்தில், அந்த மாணவர்களுக்கு உதவி இயக்குநர்கள் தங்கள் அளவிலேயே அனுமதி வழங்கி அதற்கான பின்னேற்பு ஆணையை பெற்றுக் கொள்ளலாம்.

இதன் பிறகு சலுகைகள் கோரி விண்ணப்பிக்கும் மாற்றுத் திறனாளிகள், எதிர்பாராத விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, வழிமுறைகளின் படி அனுமதி வழங்க வேண்டும்.

இதில் மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் மாவட்ட தேர்வு துறை உதவி இயக்குநர்களே முடிவு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. அரசின் வழிகாட்டுதலில் இடம்பெறாத நோய்கள், பாதிப்புகளுக்கு சலுகைகள் வழங்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE