ராணிப்பேட்டையில் ஆன்லைன் மோசடியால் இழந்த ரூ.8 லட்சம்: மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

By KU BUREAU

ராணிப்பேட்டை: தனியார் நிறுவன ஊழியர் 'ஆன்லைன்' மோசடி மூலமாக இழந்த 8 லட்சம் ரூபாயை காவல்துறையினர் மீட்டு அவரிடம் நேற்று வழங்கினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (41), தனியார் நிறுவன ஊழியர். இவரை, கடந்த சில வாரங்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் "ஆன்லைன்" மூலமாக தொடர்பு கொண்டார். சதீஷியிடம் மறுமுனையில் பேசிய நபர் உங்கள் மீது பல்வேறு மோசடி புகார்கள் வந்துள்ளன.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என கூறியுள்ளார். இதனை நம்பிய அவர் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும், வங்கி கணக்கும் மற்றும் பணம் பரிவர்த்தனை தொடர்பான விவரங்களையும் அவர்களிடம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு சதீஷியின் வங்கி கணக்கில் இருந்து 8 லட்சத்து 646 ரூபாயை மர்ம நபர் 'ஆன்லைன்' (டிஜிட்டல் அரஸ்ட் மோசடி ) மூலமாக எடுத்துள்ளனர்.

இதுகுறித்து சதீஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லாவிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரிக்க மாவட்ட சைபர் கிரைம் பிரிவுக்கு அவர் உத்தரவிட்டார். இதனையடுத்து, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (சைபர் கிரைம்) குணசேகரன் தலைமையில் உதவி ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

சதீஷின் வங்கி கணக்கில் இருந்து 'ஆன்லைன்' மோசடி மூலமாக மர்ம நபர் எடுத்த ரூ.8 லட்சத்து 646 மீட்டு, அவரது வங்கி கணக்கில் காவல் துறையினர் இருப்பு வைத்தனர். இதற்கான ஆணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா நேற்று சதீஷிடம் வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE