பிஎப் நிலுவை தொகையை செலுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை - நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

By KU BUREAU

வேலூர்: வேலூர் மண்டலத்தில் பிஎப் நிலுவைத் தொகையை செலுத்தாதவர்கள் மீதான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, வேலூர் மண்டல பிஎப் ஆணையர்-1 ரித்தேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதில் தவறி இழைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அலுவலகம், நிலுவை செலுத்தாத நிறுவனங்களிடம் இருந்து சட்டப்பூர்வ நிலுவைத் தொகையை வசூலிக்க திட்டமிட்டுள்ளது. நிலுவைத் தொகையை செலுத்த தவறியவர்கள் மீதான சட்ட நடவடிக்கையை தவிர்க்க வேண்டும்.

தவறினால் நிறுவனத்துக்கும், முதலாளிக்கும் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கி வைத்தல், பற்றுகை செய்தல் மற்றும் விற்பனை செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. தொழிலாளர்களின் பங்கை ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்த பிறகு செலுத்தவில்லை என்றால் குற்றவியல் சட்டம் 405-ன் கீழ் நம்பிக்கை மீறலாகும். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 406-ன் கீழ் தண்டிக்கப்படுவர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் குற்றத்துக்கு காரணமான நபர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE