கள்ளக்குறிச்சி: திருநாவலூரை அடுத்த சிறுளாம்பட்டு கிராம டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி, அப்பகுதி பெண்கள் நேற்று அக்கடையை தாக்கி சேதப் படுத்தினர். மேலும் உளுந்தூர்பேட்டை - பண்ருட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரை அடுத்த சிறுளாம்பட்டு கிராமத்தில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்தக் கடையை கிழக்கு மருதூர், சோமாசிப்பாளையம், தேவியாநந்தல், திருநாவலூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மது அருந்துவோர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட இக்கிராமங்களில் இருந்து மது வாங்க வருவோர் உளுந்தூர்பேட்டை - பண்ருட்டி சாலையை கடந்து செல்லும்போது விபத்தில் சிக்கி உயிரிழப்பதோடு, காயமடைவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இக்கடையால் இப்பகுதி பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் இந்த டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளித்தனர். ஆனாலும், கடை தொடர்ந்து இயங்கி வருகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் சிலர். டாஸ்மாக் கடையை நேற்று முற்றுகையிட்டு, சேதப்படுத்தினர். தகவலறிந்து வந்த திருநாவலூர் போலீஸார், அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அவர்கள் அங்கிருந்து சென்று உளுந்தூர்பேட்டை - பண்ருட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு வந்த போலீஸார், கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து, அந்தப் பெண்களை கலைந்து போகச் செய்தனர்.
» செந்தில் பாலாஜி மீதான வழக்குகளின் விசாரணை நிலவர அறிக்கையை மனுதாரர்களுக்கு வழங்க உத்தரவு
» ‘என்னை முதல்வர் ஆக்காமல் ஓயமாட்டார்கள்’ - கொந்தளித்த சீமான்; வீரப்பன் மகள் கண்ணீர் - முழு விவரம்!