இரண்டாவது மனைவி மீது புகார்: கோவையில் காவல் நிலையம் முன் இளைஞர் தீக்குளிக்க முயற்சி

By KU BUREAU

திருவண்ணாமலை: வைப்பூரில் உள்ள, திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (30). இவர், கோவைப் புதூரில் உள்ள பாரதி நகரில் தங்கி, பிளம்பிங் வேலை செய்து வருகிறார். இவரது இரண்டாவது மனைவி மேகலா.

இந்நிலையில், கார்த்திகேயன் நேற்று முன்தினம் குனியமுத்தூர் காவல் நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்த காவலர்கள் விசாரித்த போது, தனது இரண்டாவது மனைவி மேகலா மீது புகார் கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்தார். அவரை அங்கே அமரச் சொன்ன காவலர்கள், எதிர் மனுதாரரான அவரது மனைவியை அழைத்து விசாரிப்பதாக கூறினர். அப்போது திடீரென ஆவேசமான கார்த்திகேயன், குனியமுத்தூர் காவல் நிலையத்தின் நுழைவு வாயிலுக்குச் சென்றார்.

தனது வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த காலி வாட்டர் கேனை எடுத்து, தனது இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை பிடித்து தன் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்யப் போவதாக கூறினார். அதிர்ச்சியடைந்த காவலர்கள், கார்த்திகேயனை தடுக்க முயன்றனர். அப்போது காவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டி கார்த்திகேயன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தொடர்ந்து காவலர்கள் அவரை மடக்கிப் பிடித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வ பாண்டியன் குனியமுத்தூர் போலீஸாரிடம் புகார் அளித்தார். காவலர்களை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து பணி செய்ய விடாமல் தடுத்த கார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது. புகாரின் பேரில், குனியமுத்தூர் காவல்துறையினர், கார்த்திகேயனை கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE