சென்னை: கருணாநிதி என்னை கைது செய்து தலைவர் ஆக்கினார். இப்போது இவர்கள் என்னை கைது செய்து முதல்வர் ஆக்க உள்ளனர். என் மீதுள்ள நற்பெயரை சிதைக்கும் வகையில் அரசு இதை செய்துள்ளது என போலீஸாரின் விசாரணைக்கு ஆஜரான பின்னர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
சீமான், திரைப்பட இயக்குனராக பணியாற்றியபோது தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2011-ல் புகார் அளித்திருந்தார். இதை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார். வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம், 12 வாரங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போலீஸாருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, பெங்களூரு சென்று நடிகை விஜயலட்சுமியிடம் வளசரவாக்கம் போலீஸார் விசாரணை நடத்தினார். அதன்பின்னர் கடந்த 27-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சீமானுக்கு கடந்த 24-ம் தேதி சம்மன் (அழைப்பாணை) அனுப்பினர். ஆனால், அன்றைய தினம் நேரில் ஆஜராக முடியாது, 4 வாரகாலம் அவகாசம் வேண்டும் என வழக்கறிஞர் மூலம் மனு அளித்தார் சீமான். இதையடுத்து, 28-ம் தேதி காலை 11 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என 2-வது முறையாக போலீஸார் சம்மன் வழங்கினர். குறிப்பாக இந்த சம்மன் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டு நுழைவாயில் கதவில் ஒட்டப்பட்டது. அந்த சம்மனை கிழித்ததாக சீமானின் வீடுபுகுந்து நீலாங்கரை போலீஸார் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு 8 மணியளவில் ஆஜராவார் என நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர், அக்கட்சியின் மகளிர் அணியினர் என நூற்றுக்கணக்கானோர் வளசரவாக்கம் காவல் நிலையம் முன்பு மாலை முதல் திரண்டனர். இதையறிந்த போலீஸார் முன்னதாகவே, வளசரவாக்கம் காவல் நிலையத்தை சுற்றி இருந்த கடைகளை மூட அறிவுறுத்தினர். அதன்படி, கடைகளும் அடைக்கப்பட்டது.
» அரசு அலுவலகங்களில் தமிழை பயன்படுத்த ஓபிஎஸ் வலியுறுத்தல்
» நான்தான் வீட்டில் ஒட்டிய சம்மனை கிழிக்க சொன்னேன் - சீமானின் மனைவி கயல்விழி
மேலும், காவல் நிலையத்தை சுற்றி போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டது. அதோடு மட்டும் அல்லாமல் வளசரவாக் கம் காவல் நிலையம் பகுதிக்குச் செல்லும் 3 நுழைவாயில் பகுதிகளிலும் இரும்பு தடுப்புகளால் மூடப்பட்டது. அந்த வழியாக யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும், வெளிப்பகுதி நபர்கள் அங்கிருந்து செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சி தொண்டர்களையும் அங்கிருந்து கலைந்து செல்லும்படி போலீஸார் அறிவுறுத்தினர்.
ஆனால், போலீஸாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு போலீஸாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுஒருபுறம் இருக்க வளசரவாக்கம் காவல் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் போலீஸார் வீடியோவாக படம் பிடித்தனர். இவற்றை சிசிடிவி கேமரா மூலம் உயர் அதிகாரிகள் இருந்த இடத்தில் இருந்தவாறு கண்காணித்தனர்.
இதுஒருபுறம் இருக்க தர்மபுரியிலிருந்து சென்னை திரும்பிய சீமான் வடபழனியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார். அங்கு அவர் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், இரவு 8 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு காவல் நிலையம் நோக்கி காரில் சென்றார். ஏவிஎம் ஸ்டுடியோ அருகில் சீமான் கார் சென்று கொண்டிருந்த போது அவரை தொடர்புகொண்ட போலீஸார் இரவு 9.15 மணியளவில் வாருங்கள் என தெரிவித்தனர். இதையடுத்து ஏவிஎம் ஸ்டுடியோ அருகிலேயே காத்திருந்தார். பின்னர், 9.15 மணியளவில் புறப்பட்டு நெரிசல் காரணமாக 10 மணியளவில் காவல் நிலையம் சென்றடைந்தார்.
சீமானிடம் கேட்பதற்காக சுமார் 50க்கும் மேற்பட்ட கேள்விகள் அடங்கிய பட்டியலை போலீஸார் தயார் செய்து வைத்திருந்தனர். அதிலிருந்து ஒவ்வொரு கேள்வியாக கேட்கப்பட்டது. அதற்கு சீமான் அளித்த பதில்களை வாக்குமூலமாக போலீஸார் பதிவு செய்து கொண்டனர். மேலும், வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர்.
வீரப்பன் மகள் வித்யா ராணி கண்ணீர்: வளசரவாக்கம் காவல் நிலையத்துக்குள் சீமான் சென்றபோது, சீமானுடன் வந்திருந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள் வித்யா ராணி, காவல் நிலையத்துக்குள் செல்ல முயன்றார். அவரைத் தடுத்து நிறுத்திய பெண் போலீஸாருடன் வித்யா ராணி கண்ணீர் வடித்தபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, வித்யா ராணி செய்தியாளர்களிடம் கூறும்போது, “நாம் தமிழர் கட்சியை அழிக்கும் வகையில் செயல்படுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களால் கட்சியினரின் உழைப்பு பாதிக்கப்படுகிறது. தமிழகத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம் நடக்கின்றன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்காமல், சீமானை பழிவாங்கும் நோக்கில் இதுபோன்று செயல்படுகின்றனர்” என்றார்.
விசாரணைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “போலீஸ் விசாரணையில் சென்றமுறை கேட்ட அதே பழைய கேள்விகளையே இந்த முறையும் கேட்டனர். புதிய கேள்விகள் ஏதும் கேட்கப்படவில்லை. விசாரணைக்கு தாமதமாக வர, காவல் துறையினரே காரணம். என்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். விசாரணைக்கு மீண்டும் தேவைப்பட்டால் ஆஜராக தயார். போலீஸ் விசாரணையில் என்னை நல்ல முறையில் நடத்தினர்.
இந்த வழக்கை விசாரித்து முடிக்க மூன்று மாதம் கால அவகாசம் உள்ளது. மூன்றே நாளில் இதை விரைந்து செய்ய வேண்டிய அவசியம் என்ன? எனக்கு சம்மன் கிடைத்தபோது நான் பயணத்தில் இருப்பதாக தெரிவித்தேன். மீண்டும் கொடுத்த சம்மனை அடுத்து போலீஸ் விசாரணைக்கு ஆஜரானேன். போலீஸ் தரப்புக்கு இந்த வழக்கில் அழுத்தம் தரப்படுகிறது. ஆளும் திமுக அரசு இந்த வழக்கை நீட்டித்துக் கொண்டு செல்கிறது.
என் வீட்டின் கதவில் ஒட்டப்பட்ட சம்மனை அகற்றியதில் எந்த தவறும் இல்லை. எங்கள் வீட்டில் இருந்த இருவரை கைது செய்ததும், அவர்களை தாக்கியதும்தான் தவறு. சம்மனை ஒட்டியது வளசரவாக்கம் காவல் நிலைய அதிகாரிகள். அப்படி இருக்கும்போது நீலாங்கரை காவல் நிலைய அதிகாரிகள் ஏன் எங்கள் வீட்டில் இருந்தவர்களை கைது செய்ய வேண்டும்?
கருணாநிதி என்னை கைது செய்து தலைவர் ஆக்கினார். இப்போது இவர்கள் என்னை கைது செய்து முதல்வர் ஆக்க உள்ளனர். கடந்த தேர்தலில் தனித்து நின்று அடையாளம் பெற்றோம். எங்களுக்கு 36 லட்சம் வாக்குகள் விழுந்தன. வாக்குக்கு பணம் கொடுக்காமல் இதை பெற்றுள்ளோம். என் மீதுள்ள நற்பெயரை சிதைக்கும் வகையில் அரசு இதை செய்துள்ளது.
புகார் அளித்த நடிகை கடந்த 15 ஆண்டுகளாக என்னை அவமானப்படுத்தி வருகிறார். விரும்பி வந்து அவர் உறவு வைத்துக் கொண்டார். எனக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. குழந்தைகள், குடும்பம் ஆகிவிட்டது. நான் ஆபாசமாக பேசுவதாக சொல்லும் நீங்கள், அந்த பெண் என்னைபற்றி பேசியபோது ரசித்துக்கொண்டு தானே இருந்தீர்கள்?. என்னைப் பற்றி என் மீதான பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டதா?
அரசியல் களத்தில் நான் ஒரு பக்கமும், விஜய் ஒரு பக்கமும் நிற்கிறார். என்றைக்கும் அவர் எனது அன்புத் தம்பி தான். முதல்வர் அப்பா ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்றார்.