சென்னை: அரசு அலுவலகங்களில் தமிழ் மொழியை பயன்படுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பெரும்பாலான அரசாணைகள் ஆங்கிலத்திலேயே உள்ளன. எடுத்துக்காட்டாக, 2024-ம்ஆண்டு உள்துறை மூலம் வெளியிடப்பட்ட முக்கியமான அரசாணைகளில் 80 அரசாணைகள் ஆங்கில மொழியிலும், ஒரே ஒரு அரசாணை தமிழ் மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளன.
சுகாதாரத்துறையில் ஒரே ஒரு அரசாணை தமிழ் மொழியிலும், 65 அரசாணைகள் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. ஊரக வளர்ச்சித் துறையில் 8 அரசாணைகள் தமிழிலும், 67 அரசாணைகள் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.
அரசு பேருந்துகளில் நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களுக்கு தமிழில் வழங்கப்பட்டிருந்த பேருந்து குறிப்பேடு தற்போது ஆங்கிலத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது. தமிழ் மொழியைகாக்க வேண்டிய இடத்தில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் தமிழ்மொழி காக்கும் முழக்கத்தை முன்னிறுத்துவோம் என்று கூறுவது திமுக அரசின் நிர்வாக திறமையின்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
» நான்தான் வீட்டில் ஒட்டிய சம்மனை கிழிக்க சொன்னேன் - சீமானின் மனைவி கயல்விழி
» மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ மார்ச் 1, 2025
எனவே, தமிழக அரசு அலுவலகங்களில், பொதுத் துறை நிறுவனங்களில் முழுவதுமாக தமிழ்மொழியைப் பயன்படுத்தவும், பிற மாநிலங்களில் தமிழ் மொழியை வளர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.