மதுரை: மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கு இடையூறாக இருக்கும் நீர் பிடிப்பு பகுதியை ரூ.90 கோடியில் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மதுரை விமான நிலைய விரிவாக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்தில் இன்று நடந்தது. எம்பிக்கள் மாணிக்கம் தாகூர் (விருதுநகர், சு.வெங்கடேசன் (மதுரை) ,மதுரை ஆட்சியர் சங்கீதா, மாநகர காவல் ஆணையர் லோகநாதன், விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார், இண்டிகோ, ஏர் இந்தியா, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியது; மதுரை விமான நிலைய தேவை மற்றும் தீர்த்து வைக்கப்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது 24 மணி நேர சேவை முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இரவு விமான நிறுவனங்கள் தொடங்க கோரிக்கை விடுத்துள்ளோம். சிங்கப்பூர் ஏர் இந்தியா விமான சேவை குறித்து அதன் சிஇஓ. வை சந்திக்க உள்ளோம். சின்ன உடைப்பு விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
இதற்கு விரைவில் நீதி கிடைக்கவேண்டும். மக்களின் பிரச்சினையாக இருந்தாலும், நீதிமன்றம் எடுக்கும் முடிவை விமான நிலைய வளர்ச்சிக்கென பார்க்கவேண்டும். இந்தியாவிலுள்ள அனைத்து விமான நிறுவனங்களும் தனியார் தான். நாங்கள் கடையை திறந்து வைத்து இருக்கிறோம். நீங்கள் விமான சேவையை நடத்துங்கள் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
» மாநிலங்களுக்கான வரிப் பகிர்வில் ரூ.35,000 கோடியை குறைப்பதா? - மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
» 1913ல் ஆரம்பித்த கல்விப்பணி: திருவாரூர் கோவிந்தகுடி அரசு தொடக்க பள்ளியில் இன்று 113-ம் ஆண்டு விழா!
மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்கான பகுதியில் நீர் பிடிப்பு இருப்பது முக்கிய பிரச்னையாக உள்ளது. விருதுநகர் மாவட்டத்திற்கு குண்டாறு வழியாக கால்வாய் செல்லும் வழியை புதிய திட்டம் மூலம் ரூ. 90 கோடியில் மாற்று பாதையில் அனுப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்த நிலத்தை விமான நிலைய நிர்வாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும், என்றார்.
சு.வெங்கடேசன் எம்பி கூறுகையில், ‘மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்கு இடையூறாக இருக்கும் நீர் பிடிப்பு பகுதியை ரூ. 90 கோடியில் மாற்றி அமைக்க, மதுரை ஆட்சியர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக முதல்வரும் நீர்வளத்துறை அமைச்சரும் வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கினால் விமான நிலைய விரிவாக்க பணி வேகமெடுக்கும். இன்னும் 6 மாதத்திற்குள் பாஷா ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்புள்ளதாக அமைச்சர் சொல்கிறார். இதன் மூலம் சர்வதேச விமான நிலையமாக மாறும் திட்டம் நிறைவேறும், என்றார்.