இ-பைலிங் முறைக்கு முந்தைய குற்றப்பத்திரிகைகளை ஏப்.15-க்குள் தாக்கல் செய்க: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு 

By கி.மகாராஜன்

மதுரை: தமிழகத்தில் இ-பைலிங் முறை கட்டாயமாக்கப்பட்ட நாளுக்கு முந்தைய வழக்குகளின் குற்றப்பத்திரிகைகளை நீதிமன்றங்களில் ஏப்.15-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி ஜனார்த்தனன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது இ-பைலிங் முறையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸ் தரப்பிலும், மாவட்ட நீதிமன்றம் தரப்பிலும் மாவட்டம் வாரிய தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை எண்ணிக்கை, விசாரணைக்கு எடுக்கப்பட்ட குற்றப்பத்திரிகைகள் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மாவட்ட நீதிமன்றம், போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளி விபரங்களில் பெரியளவில் வேறுபாடுகள் காணப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தமிழ்நாடு, புதுச்சேரியில் குற்ற வழக்குகளின் குற்றப்பத்திரிகைகள் இ-பைலிங் முறைப்படி தாக்கல் செய்வது கட்டாயம் என உயர் நீதிமன்றம் 2023-ல் உத்தரவிட்டது. இதனால் தற்போது இ-பைலிங் போர்டல் வழியாக குற்றப்பத்திரிகைகளை போலீஸார் தாக்கல் செய்து வருகின்றனர். சில தொழில்நுட்ப பிரச்சினையால் இ-பைலிங் முறையில் தாமதம், தவறுகள் ஏற்படுவது தெரிகிறது. இதனால் இசை சரி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற மின்னணு குழு குற்றவியல் நீதி அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை, நீதிமன்றம், சிறை, தடயவியல் துறை, விசாரணை அமைப்புகளை இணைத்து குற்றவியல் நீதி அமைப்பு (ஐசிஜெஎஸ்) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பை தேசிய தகவல் மையத்துடன் இணைந்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இயக்கி வருகிறது. ஐசிஜெஎஸ் முறை பல்வேறு மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் ஐசிஎஜஎஸ் அமைப்புடன் குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கண்காணிக்கும் வலையமைப்பு (சிசிடிஎன்எஸ்) சரியாக இணையவில்லை.

தமிழக காவல்துறை தனி வலையமைப்பை பயன்படுத்தி வருவதால் மின்னணு விசாரணை, மின்னணு சிறை, மின்னணு தடயவியல் துறைகளை ஒருங்கிணைப்பதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஐசிஜெஎஸ் பிளாட்பாரத்துடன் சுலபமாக இணையும் வகையில் தமிழகத்தின் சிசிடிஎன்எஸ் 2.0 டிசம்பர் 2023-ல் முடியும் என போலீஸ் தரப்பில் ஏற்கெனவே உறுதியளிக்கப்பட்டது. இருப்பினும் இன்னும் முடியாமல் உள்ளது. அடுத்த 3 மாதங்களில் தமிழக காவல்துறை சிசிடிஎன்எஸ் 2.0-வை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

இந்த முக்கிய பிரச்சினைக்கு தீர்வு காண உள்துறை, காவல்துறை பிற துறைகள் இணைந்து செயல்பட்டு இ-பைலிங் முறை தடையில்லாமல் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இ-பைலிங் முறை எளிமையாக பயன்படுத்தும் வகையில் இல்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை உயர் நீதிமன்ற தகவல் தொழில்நுட்ப பதிவுத்துறை சரி செய்ய வேண்டும்.

இ-பைலிங் முறை கட்டாயமாக்கப்பட்ட 15.9.2023-க்கு முந்தைய வழக்குகளில் கையால் எழுதப்பட்ட குற்றப்பத்திரிகைகளை அனைத்து நீதித்துறை நடுவர்களும் காவல் நிலையங்களிலிருந்து பெற வேண்டு்ம். இந்த வழக்குகளின் குற்றப்பத்திரிகைகளை 15.4.2025-க்குள் போலீஸார் தாக்கல் செய்ய வேண்டும். இ-பைலிங் முறை முறையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய மாவட்ட அளவிலும், தாலுகா அளவிலும் குழு அமைக்க முதன்மை மாவட்ட நீதிபதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.' இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE