சீமான் வீட்டில் போலீஸார் வன்முறை; முதல்வர் ஸ்டாலினின் திராவிடப் பழிவாங்கல் நடவடிக்கை: மணியரசன் கண்டனம்

By KU BUREAU

சென்னை: சீமான் அவர்களின் சென்னை நீலாங்கரை இல்லத்தில், நீலாங்கரை காவல்துறையினர் தேவையற்ற நிலையில் வலுக்காட்டாயமாகப் புகுந்து தாக்குதல் நடத்தி, வழக்கமாக வீட்டுக் காவலர்களாகப் பணியில் இருந்த இருவரை இழுத்துக் கொண்டுசென்று, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் வழக்குப் போட்டு, சிறையில் அடைத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என தமிழ்த்தேசியப் பேரியக்க தலைவர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்களின் சென்னை நீலாங்கரை இல்லத்தில், நீலாங்கரை காவல்துறையினர் தேவையற்ற நிலையில் வலுக்காட்டாயமாகப் புகுந்து தாக்குதல் நடத்தி, வழக்கமாக வீட்டுக் காவலர்களாகப் பணியில் இருந்த இருவரை இழுத்துக் கொண்டுசென்று, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் வழக்குப் போட்டு, சிறையில் அடைத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இது மு.க. ஸ்டாலின் ஆட்சியின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். அரசு வழங்கும் அதிகாரத்தைத் தமது சொந்த அரசியல் பழி தீர்த்தலுக்குப் பயன்படுத்தியுள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

விசயலட்சுமி என்ற நடிகையைத் திருமணம் செய்து கொள்வதாக உறுதிகொடுத்து, அவரோடு பழகி, பாலுறவு கொண்டு, பின்னர் அவரைத் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார் என்பது சீமான் மீதுள்ள வழக்கு. சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் மேற்படி விசயலட்சுமி 2011இல் கொடுத்த வழக்கை, 2012இல் சமரசமாகிவிட்டதாகக் கூறி புகாரைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், அவர் மீதான வழக்கை நீக்கிவிடுமாறும் விசயலட்சுமி மனு கொடுத்துவிட்டார்.

இந்த வழக்கு பாலியல் வன்முறை புகார் சார்ந்தது அல்ல. இருவரும் சம்மதித்து பாலுறவு கொண்டிருக்கிறார்கள். இதைப் பாலியல் வல்லுறவு வழக்கு போல் சித்தரிக்கக் கூடாது. உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் அவர்கள் இவ்வழக்கு தொடர்பாகக் கூறியுள்ள கருத்துகள் உச்ச நீதிமன்றத்தில் நிற்குமா என்பது ஒருபக்கம். பொது அறிவுக்கு எட்டிய வரையில், மைனர் அல்லாத ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள இருவரும் சம்மதித்து, பாலுறவு கொண்டதைக் குற்றமாகக் கருத முடியாது. திருமணம் செய்யாமல் ஏமாற்றினார் என்பது வேறு வழக்கு. அதிலும் அவ்வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக எழுத்து வடிவிலும் ஊடகங்கள் வழியாகவும் மேற்படி விசயலட்சுமி கூறியபின், அதைப் பயன்படுத்தி காவல்துறையை ஏவி, தி.மு.க. ஆட்சியினர் அட்டூழியம் செய்வது பச்சையான சட்டவிரோதச் செயல்கள்!

காவல்துறையினர் தன் வீட்டுச் சுவரில் ஒட்டிய அழைப்பாணையைக் கிழிப்பது குற்றமல்ல. அது குற்றம் சாட்டப்பட்டவர் குறிப்பிட்ட தேதியில் நேர்நிற்க வேண்டும் என்பதை அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கும் வடிவம். வீட்டில் அழைப்பாணையைப் பெறுவதற்கு ஆள் இல்லாமல் இருந்தாலோ, அல்லது பெறுவதற்கு மறுத்தாலோ அழைப்பாணை ஒட்டப்பட வேண்டும் என்பதுதான் சட்ட நியதி.

அப்போது வீட்டில் இருந்த சீமானின் வாழ்க்கை இணையர் கயல்விழி அவர்கள். அழைப்பாணையைக் கொடுக்க உள்ளே வரவே இல்லை. எதுவும் சொல்லாமல் ஒட்டிவிட்டுச் சென்றனர் என்று ஊடகங்களில் கூறியுள்ளார்.

மு.க. ஸ்டாலின் ஆட்சி தன்னல நோக்கில் அரசு எந்திரத்தைப் பயன்படுத்தி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் குடும்பத்தினர், பணியாளர்கள் மீது வன்முறைகளை ஏவுவதைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழ்நாடு காவல்துறையின் மேலதிகாரிகள் இதில் தலையிட்டு கீழ்நிலைக் காவல் அதிகாரிகள் நடுநிலையோடு, சட்ட வரம்பிற்குட்பட்டு செயல்பட அறிவுறுத்த வேண்டும். கனடா நாட்டில் உள்ளதுபோல் காவல்துறை, இந்தியாவிலும் தன்னாட்சி பெற்ற (Autonomous body) சட்டம் ஒழுங்கு அமைப்பாக மாற்றப்படவேண்டும். இதுபற்றியும் காவல்துறை மேலதிகாரிகளையும் மனித உரிமை அக்கறையாளர்களும் விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வீட்டுக் காவல் பணியில் இருந்த இருவர் மீது போட்ட வழக்கைக் கைவிட்டு, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE