தஞ்சை: கும்பகோணம் பழைய நகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான அவசரக் கூட்டம் நேற்று நடைபெற்றது.மேயர் க.சரவணன் தலைமை வகித்தார். துணை மேயர் சு.ப.தமிழழகன், ஆணையர் (பொறுப்பு) க.பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், மக்களவைத் தொகுதிகள் மறு சீரமைப்பு நடவடிக்கை, மும்மொழிக் கொள்கை திணிப்பு ஆகியவற்றுக்கு முயற்சி செய்யும் மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, உறுப்பினர்கள் பேசியது: புதை சாக்கடை இணைப்பு இல்லாத வீடுகளுக்கும் வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆய்வு செய்து, புதை சாக்கடை இணைப்பு இல்லாத வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும்.
40-வது வார்டு மும்மூர்த்தி விநாயகர் சந்நிதி- மருத்துவத் தெரு இணைப்பு சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். தாராசுரத்தில் தெரு மின் விளக்குகள் அமைக்க வேண்டும். மயானத்துக்கு சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் என்றனர்.
» தருமபுரி ஆட்சியரை மிரட்டிய திமுக மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை: அன்புமணி கோரிக்கை
» உங்களை விலை கொடுத்து வாங்க முயற்சித்தது யார்? - நிருபர் கேள்விக்கு திருமாவளவனின் ரியாக்ஷன்!
காங்கிரஸ் மேயர், உறுப்பினர் இடையே வாக்குவாதம்..
காங்கிரஸ் அய்யப்பன்: கடந்தாண்டு டிச.31-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டனவா.
மேயர்: அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. நீங்களும் கையெழுத்திட்டுள்ளீர்கள்.
இதற்கு, எப்போது நிறைவேற்றப்பட்டன என அய்யப்பன் கேட்டதற்கு, சற்று கோபத்துடன், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டன என மேயர் பதில் அளித்தார்.
இதையடுத்து, வாழ்க என கூறிவிட்டு அய்யப்பன் தனது இருக்கையில் அமந்தார்.
தொடர்ந்து, ஆணையர் (பொறுப்பு) க.பாலு பேசியது: பால்பாயின்ட் பேனா பயன்பாட்டால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. அந்த பிளாஸ்டிக் உறையை மறுசுழற்சி செய்வது கடினம். எனவே, மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு மை பேனா வழங்கும் திட்டத்தை தொடங்க வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து, அந்தத் திட்டத்தை முதலில் நம்மிடம் இருந்தே தொடங்குவோம் எனக் கூறி, மேயர், துணை மேயர் உட்பட கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் மை பேனா வழங்கப்பட்டது.
கணவர்களுக்கு அனுமதி இல்லை..கூட்ட அரங்கு உள்ளே பெண் உறுப்பினர்களின் கணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், எங்களை உள்ளே அனுமதிக்காததால், நீங்களும் உள்ளே இருக்க வேண்டாம். வெளியே வந்துவிடுங்கள் என செல்போன் மூலம் பெண் உறுப்பினர்களுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, கூட்ட அரங்கில் இருந்து வெளியே சென்ற பெண் உறுப்பினர்கள், கூட்ட அரங்கில் இருந்து வெளியே சென்ற ஆணையர் (பொறுப்பு) க.பாலுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த துணை மேயர் தமிழழகன், பெண் உறுப்பினர்கள். அவர்களது கணவர்களை அழைத்து, பெண் உறுப்பினர்களின் கணவர்களை, இனி எனது அறையில் அமர வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து, இப்பிரச்சினை அத்துடன் முடிவுக்கு வந்து அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்.