தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்களை பரிதவிக்க வைக்கும் வகையில் காணப்படும் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலைக்கு விமோசனம் கிடைத்துள்ளது. ரூ.22.40 கோடியில் 17 கி.மீ., தொலைவுக்கு சாலையை சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் தூத்துக்குடி- திருச்செந்தூர் இடையேயான சாலையும் ஒன்றாகும். சுமார் 40 கி.மீ. தூரம் கொண்ட இச்சாலை, கடந்த 2021ம் ஆண்டு முதல் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருகின்றன. வடமாவட்டங்களில் இருந்தும், வடமாநிலங்களில் இருந்தும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வாகனங்களில் பக்தர்கள் இந்த சாலை வழியாகத்தான் வந்து செல்கின்றனர்.
மேலும், இந்த சாலையில் ஆறுமுகநேரி அருகே தாரங்கதார கெமிக்கல் தொழிற்சாலை, ஸ்பிக் நிறுவனம், மத்திய அரசின் கனநீர் தொழிற்சாலை, பழையகாயலில் அணு சக்தி துறைக்கு சொந்தமான ஜிர்கோனியம் தொழிற்சாலை போன்ற முக்கிய தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
பரிதாப நிலை: இதனால் இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. ஆனால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. மேலும், கடந்த 2023 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சாலையின் பல இடங்களில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
» தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.7.45 கோடி உபரி வருவாய் பட்ஜெட் தாக்கல்!
» மாவட்ட ஆட்சியர், எஸ்.பிக்கு திமுக தர்மபுரி பொறுப்பாளர் தர்மசெல்வன் மிரட்டல்: இபிஎஸ் கடும் கண்டனம்
சாலையில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக தூத்துக்குடி முதல் முக்காணி வரை சாலையின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. சாலையில் உள்ள பள்ளங்களில் வாகனங்கள் விழுந்து தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
இரவு நேரங்களில் இந்த சாலையில் பயணிக்க முடியாமல் முருக பக்தர்கள், வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகின்றனர். இந்த சாலையை விரைவாக சீரமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள், சாலையோர கிராமங்களில் வாழும் மக்கள், வாகன ஓட்டிகள், சமூக செயல்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
விரைவில் சீரமைப்பு: இது தொடர்பாக 'இந்து தமிழ் திசை' நாளிதழிலும் இரண்டு முறை விரிவான செய்தி வெளியானது. இந்நிலையில், இந்த சாலைக்கு தற்போது விமோசனம் கிடைத்துள்ளது. முதல் கட்டமாக தூத்துக்குடி முதல் முக்காணி வரை 17 கி.மீ., தொலைவுக்கு சாலையை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கோட்ட பொறியாளர் சண்முக சுந்தரம் 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறுகையில், தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் தூத்துக்குடியில் இருந்து 17 கி.மீ., தொலைவுக்கு சீரமைக்க ரூ.22.40 கோடிக்கு ஒப்பந்தப் புள்ளி கோரப் பட்டது. தற்போது ஒப்பந்தபுள்ளி திறக்கப்பட்டு, சென்னையில் உள்ள ஒப்பந்தப்புள்ளி ஒப்புதல் ஆணையத்துக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. அந்த ஆணையம் 10 நாட்களில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கிறோம். ஒப்புதல் அளித்ததும் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என்றார் அவர்.