புதுகோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடி பகுதியில் வசித்து வரும் நட்டாஷா என்பவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். சில வாரத்துக்கு முன்னரே குட்டி ஈன்ற அந்த நாயை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கொடூரமான முறையில் அடித்து கொலை செய்து, கயிற்றில் கட்டி தொங்க விடப்பட்டிருந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் நாயின் உரிமையாளர் நட்டாஷா கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இதுநாள் வரை நாயை கொன்ற குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்தும், விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம் எதிரே நேற்று விலங்குகள் நல ஆர்வலர்கள் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.