பெங்களூரு: கர்நாடக மாநில சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் பெரும்பாலான கடைகளில் இட்லி துணிக்கு பதிலாக பிளாஸ்டிக் ஷீட் பயன்படுத்தப்படுவதை கண்டறிந்தனர். இது புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என எச்சரித்துள்ளனர்.
மக்கள் ஆரோக்கிய உணவாக கருதும் இட்லி எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்ய 500க்கும் மேற்பட்ட கடைகளிலும், ஓட்டல்களிலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகத்திற்கு அனுப்பியிருந்தது கர்நாடக சுகாதாரத்துறை.
இதில் எடுக்கப்பட்ட முதற்கட்ட ஆய்வு முடிவுகளில், உணவுப்பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதில், பெரும்பாலான கடைகளில் இட்லி துணிக்கு பதிலாக பிளாஸ்டிக் ஷீட் பயன்படுத்தப்படுவதை கண்டறிந்தனர். இந்த பிளாஸ்டிக் ஷீட்டில் மாவு ஊற்றி, இட்லி பாத்திரத்தில் சூட்டில் வேகவைக்கும்போது, பிளாஸ்டிக் ஷீட்டில் இருந்து டையாக்சின், மைக்ரோ பிளாஸ்டிக் (carcinogenic) என்ற ரசாயனம் வெளியேறி இட்லியில் கலந்து விடுகிறது. இந்த இட்லியை சாப்பிடும்போது, அது புற்றுநோய்க்கு வழிவகுப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இதுகுறித்து பேசிய கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், ‘உணவு தயாரிப்புகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. 52 ஹோட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் சேகரித்த இட்லிகளில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
புற்றுநோயை உண்டாக்கும் முக்கிய காரணியாக பிளாஸ்டிக் இருப்பதால், உணவுப் பொருட்களில் பிளாஸ்டிக் துகள்கள் சேரும் அபாயம் உள்ளதால், அதை ஹோட்டல் நடத்துபவர்கள் பிளாஸ்டிக் ஷீட்டுகளை தவிர்க்க வேண்டும். யாரேனும் அதுபோன்று செய்தால், அரசின் கவனத்துக்கு பொதுமக்கள் கொண்டு வரலாம்’ என்று தெரிவித்துள்ளார்