முழுமையாக கடனைச் செலுத்தும் புதிய நடைமுறைக்கு மாற்றாக, முன்பு இருந்தது போல் நகை, பயிர்க் கடனுக்கு வட்டி செலுத்தி, அதே நிலையில் கடனை புதுப்பிக்கக் கோரி விவசாயிகள் புதுச்சேரி மாநில வங்கியாளர் குழும தலைவரிடம் மனு அளித்து முறையிட்டுள்ளனர்.
புதுச்சேரி விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக, அதன் தலைவர் முருகையன், பொதுச் செயலாளர் டி. பி.ரவி, துணைத்தலைவர் பாஸ்கர் உள்ளிட்டோர் புதுச்சேரி மாநில வங்கியாளர் குழும தலைவர் மற்றும் மண்டல மேலாளர் ஆகியோரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அதன் விவரம் வருமாறு: மத்திய அரசு விவசாயிகளுக்கு அதிகபடியாக கடன் வழங்குவதாக அறிவித்திருக்கிறது ஆனால். வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் பல்வேறு இடர்பாடுகளை ஏற்படுத்தி வருகின்றன. விவசாயிகளுக்கு கடன் கிடைப்பது எட்டாக்கனியாகவே உள்ளது. விவசாயிகள் நலன் சார்ந்து மத்திய அரசு அறிவித்த கடன்களை விவசாயிகள் பயன்பெறும் வகையில் வங்கிகள் வழங்கிட வேண்டும்.
கடந்த காலங்களில் விவசாயிகள் வாங்கிய நகைக் கடன், விவசாய பயிர்க் கடன் ஆகியவற்றுக்கு வட்டி மட்டும் செலுத்தி புதுப்பிக்கலாம் என்ற நடைமுறை இருந்தது. தற்போது இந்த முறை மாற்றப்பட்டு அசலுடன், வட்டியை முழுவதுமாக கட்டி புதுப்பிக்கும் நடைமுறையை வங்கிகள் அறிவித்துள்ளன. இது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முறையில் நகைகளை முழுவதுமாக திருப்பி, மீண்டும் கடனுக்கு வைக்க தொகை தேவைப்படுகிறது. இநத உடனடித் தொகைக்காக கந்து வட்டிக்காரர்களிடம் சென்று கடன் வாங்கி, அதனால் கடன் சுமை ஏற்பட்டு, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும். எனவே இந்த புதிய முறையை மறுபரிசீலனை செய்து, பழைய முறைப்படி வட்டி மட்டும் செலுத்தி, நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளுக்கு எளிமையாக கடன் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.