திண்டுக்கல்: பழநி முருகன் கோயிலில் புலிப்பாணி வாரிசுகள் அல்லது அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கலாம் என்ற வழிமுறையில் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.
பழநியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஆதி காலத்தில் பழநி முருகன் கோயிலில் புலிப்பாணி வழிவந்தவர்கள், பார்ப்பனர்கள் அல்லாதோர் தான் அர்ச்சகராக இருந்தனர். மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் பார்ப்பனர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். எனவே, மீண்டும் பழநி கோயிலில் புலிப்பாணி வாரிசுகளை அல்லது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வழிமுறையில் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்.
தவெக தலைவர் விஜய் வீட்டில் இருந்தே அரசியல் செய்து வருகிறார். அவருக்கு நடிப்பு திறமை இருக்கிறது. ஆனால், அந்த நடிப்பினால் அவருக்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை. அவர் முதலில் மக்களை சந்திக்க வேண்டும்.
பெரியாரையும் அம்பேத்கரையும் விடவே முடியாது. அம்பேத்கர் படத்தை காண்பித்து வாக்கு வாங்கும் நிலைக்கு பாஜக வந்துவிட்டது. அம்பேத்கர் ஒரு இமயமலை என்பதால் பாஜக அவரது அருகில் செல்கிறது. ஆனால், பெரியார் எரிமலை. அதனால் அவர்களால் பெரியார் அருகில் நெருங்க முடியவில்லை. அதனால் பெரியாரின் பிம்பத்தை கலைப்பதற்கு, சில கைக்கூலிகளை விட்டு வேலை பார்த்தனர். பாஜக தலைவர் அண்ணாமலை பேசும் கருத்துகள் அனைவரையும் புண்படுத்தும்படி இருக்கிறது” என்று கி.வீரமணி கூறினார்.
» சீமான் வீட்டில் கைதான ஊழியர்களுக்கு மார்ச் 13 வரை காவல்: நடந்தது என்ன? - முழு விவரம்
» தகுதியான தொழிலாளர்கள் பற்றாக்குறை; திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கவலை!