சென்னை: சீமான் வீட்டில் கைது செய்யப்பட்ட காவலாளி அமல்ராஜ் மற்றும் பணியாளர் சுபாகருக்கு மார்ச் 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் காவல் துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2011-ல் புகார் அளி்த்திருந்தார்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக அண்மையில் நடந்தது. அப்போது ‘‘இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது.
இந்த வழக்கில் போலீஸார் 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு சீமான் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து, வளசரவாக்கம் போலீஸார் சீமானுக்கு அண்மையில் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், நேற்று (பிப்.27) சீமானின் வழக்கறிஞர்கள் அவரது சார்பாக நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இந்நிலையில், இன்று (பிப்.,28) காலை 11 மணிக்கு வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும் என்று சீமான் வீட்டில் போலீஸார் சம்மன் ஒட்டியுள்ளனர். போலீஸார் ஒட்டிய சம்மனை சீமான் வீட்டு ஊழியர்கள் கிழித்தனர்.
» இஸ்லாமிய வாக்குகளை பெற மக்கள் வரிப்பணத்தை வாரி இறைக்கும் திமுக அரசு: இந்து முன்னணி குற்றச்சாட்டு
அப்போது வீட்டினுள் நுழைய முயற்சித்த போலீசாரை, சீமான் வீட்டில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தடுக்க முயற்சித்தனர். இதனால் சீமான் வீட்டிலிருந்த 2 ஊழியர்களை இழுத்து சென்று போலீசார் கைது செய்தனர். சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த சீமான் மனைவி கயல்விழி, போலீசாரிடம் சமாதானம் பேசி மன்னிப்பு கோரினார். இருப்பினும் போலீஸார் அவர்களை ஜீப்பில் அழைத்துச் சென்றனர். இதனால் சீமான் வீடு அமைந்துள்ள பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, துப்பாக்கி வைத்திருந்த காவலாளி அமல்ராஜ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுள்ளதாகவும், சம்மனை கிழித்த சுபாகர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட காவலாளி அமல்ராஜ் மற்றும் பணியாளர் சுபாகரை சோழிங்கநல்லூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் மார்ச் 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அவர்கள் இருவரையும் காவல் துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்