இஸ்லாமிய வாக்குகளை பெற மக்கள் வரிப்பணத்தை வாரி இறைக்கும் திமுக அரசு: இந்து முன்னணி குற்றச்சாட்டு

By KU BUREAU

சென்னை: இஸ்லாமிய வாக்குகளை பெற மக்கள் வரிப்பணத்தை திமுக அரசு வாரி இறைப்பதாக இந்து முன்னணி குற்றம்சாட்டி உள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தாண்டு ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க மசூதிகள், தர்காக்களுக்கு 7,920 மெட்ரிக் டன் தரமான பச்சரிசியை வழங்க தமிழக அரசு உத்தரவு போட்டுள்ளது. இதுவரை அளித்ததைவிட 30 சதவீதம் அதிகமாக அளித்துள்ளது‌. 2026 தேர்தலில் இஸ்லாமிய வாக்குகளை குறி வைத்து திமுக, மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்துள்ளது.

இந்துக்கள் ஆடி மாதத்தில் அம்மன் ஆலயங்களில் கூழ் வார்த்தல் நடத்துகிறார்கள். ஆனால் அதற்கு உதவி செய்ய தமிழகத்தை ஆண்ட கட்சிகளுக்கு மனமில்லை. ரம்ஜான் நோன்பிற்கு தரும் அரிசியை ஏன் மசூதிகளுக்கு தர வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது. இதை ஏன் ரேஷன் கடை மூலம் நேரடியாக அம்மக்களுக்கு வழங்கக்கூடாது? மதவாதத்தை ஊக்குவிக்க தமிழக அரசு துணை போகிறதா என்ற கேள்வி எழுகிறது.

இந்து கோயில்கள் மற்றும் அதன் சொத்துக்கள் மதசார்பற்ற அரசின் இரும்புப் பிடியில் இருக்கிறது. ஆனால் இந்து கோவில்களிலிருந்து கிடைக்கும் வருமானம் இந்து சமயத்தை வளர்க்க உதவுகிறதா? எனவே மதச்சார்பின்மை பேசி கொண்டு மதத்தின் அடிப்படையில் ஒருதலைப்பட்சமாக தமிழக அரசு செயல்படுவதை இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE