சென்னை: திமுக அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், பொன்முடி, நாசர் ஆகியோர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் தொடங்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘திருவள்ளூரில், திமுக அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், பொன்முடி, நாசர் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி, தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படாமல் தொடங்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இரண்டு மொழிக் கொள்கை என்ற பெயரில், தமிழகத்தில் தமிழ் மொழியே இல்லாத தனியார் பள்ளிகள் கட்டமைப்பை உருவாக்கி, தாய்மொழிக் கல்வியைக் கட்டாயமாக்கும் புதிய கல்வித் திட்டத்தைத் தங்கள் சுயலாபத்திற்காக எதிர்த்து, நாளொரு நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் திமுக, தமிழ் மொழியை வியாபாரமாகவும், அரசியல் செய்யவும் மட்டுமே, தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.
தனது அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் அவமதிக்கப்பட்டுள்ளதற்கு, புதியதாக என்ன நாடகம் அரங்கேற்றப் போகிறார் முதல்வர் ?" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
» நிதி தர மறுக்கும் பாஜகவுக்கு தமிழக மக்கள் வாக்கு செலுத்தக் கூடாது: சீமான் கோரிக்கை
» தமிழக ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கத் திட்டமா? - டிடிவி தினகரன் அதிர்ச்சி