ஓசூர்: தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு இல்லை என்பதால் நிதி தரமறுக்கிறது. இதனை மனதில் வைத்துக்கொண்டு தேர்தலில் தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்ககூடாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை தமிழகத்திற்கு நிதி தராமல் வஞ்சிப்பது இதனை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தன்னிச்சையாக போராட்டம் செய்வோம். இந்தியா, நைஜீரியா இந்த இரு நாடுகளில் தான் எலக்ட்ரானிக் வாக்கு பதிவுமுறை வைத்துள்ளது. இந்த இரு நாடுகளுமே ஊழலில் மோசமான நாடுகள், மைக்ரோ எலக்ரானிக் சிப்பை சீனா நாடு தான் தயாரித்தது. ஆனால் அந்த நாடே பயன்படுத்தவில்லை், அமெரிக்காவும் எலக்ட்ரானிக் முறையை பயன்படுத்துவதில்லை.
இதனால் , எலக்ட்ரானிக் வாக்கு பதிவுமுறை ஒழித்துவிட்டு சீட்டு முறையை வாக்களிக்க வேண்டும். ஒரு நபர் இரு தொகுதிகளில் போட்டியிடுவதை தவிர்க்க வேண்டும். இடைத்தேர்தல் முறையை நீக்க வேண்டும். இரண்டாவதாக வந்தவரை வெற்றி பெற்றதாக அறிவித்து மீதமுள்ள காலங்களில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். இது போன்ற மாற்றங்கள் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும்.
மத்தியில் ஆளும் எந்த தேசிய தேசிய கட்சிகளாக இருந்தாலும் தமிழகத்தில் உள்ள வளங்களை சுரண்டிவிட்டு நிதி தரமறு கின்றனர். உரிமை எனும் வரும் போது முற்றிலும் மறுத்துவிடுகின்றனர். பேரிடர்களுக்கு நிதி வழங்கவில்லை, தமிழகம்- கர்நாடக இரு மாநிலங்களுக்கும் இடையே நதிநீர் உரிமை பெற்றுக்கொடுப்பதிலும் நடுவடிக்கை எடுப்பதில்லை, இந்த பிரச்சனை இருந்தால் தான் அவர்களால் அரசியல் செய்ய முடிகிறது. பீகார் மற்றும் ஆந்திராவில் பாஜகவிற்கு ஆதரவு தேவைப்படுவதால், அந்த மாநிலங்களுக்கு தாராளமாக நிதி வழங்கப்படுகிறது.
» கும்பகோணத்தில் உள்ள 44 குளங்களை அளவீடு செய்ய 5 நில அளவையர்கள் நியமனம்: சார் ஆட்சியர் உத்தரவு
» சினிமா புகழை வைத்து எல்லாவற்றையும் ஓரம் கட்ட முடியாது: விஜய் குறித்து திருமாவளவன் கருத்து
ஆனால் தமிழகத்தில் அவர்களுக்கு ஆதரவு இல்லை என்பதால் நிதி தரமறுக்கிறது. இதனை மனதில் வைத்துக்கொண்டு தேர்தலில் தமிழக மக்கள் அவர்களுக்கு வாக்களிக்ககூடாது. ஆனால் தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை, தமிழகத்திற்கு நிதி வழங்கவில்லை என புலம்புவதை விட வரிசெலுத்துமாட்டோம் என கூற வேண்டும்.
பேரறிஞர் அண்ணா காமராஜரோட முடிந்தது நல்லாட்சி கனவு, கருணாநிதி எப்போது அந்த நாற்கலியில் அமர்ந்தாரோ அப்போதே தீய அரசியல் ஆட்சி தொடங்கியது. தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளில் போதை பழக்கம் அதிகரித்துவிட்டது. இங்கு அமைப்பு தவறு என நான் சொல்கிறேன். அதனை தான் ரஜினி சிஸ்டம் ராங் என கூறுகிறார்.
நல்ல அரசியல், நல்ல ஆட்சி வேண்டும். இல்லை என்றால் இலங்கை, வங்காள தேசம் போன்று, மக்கள் புரட்சி இந்தியாவிலும் உருவாகும். சிறு, சிறு நெருப்பு துண்டுகளாக எரிந்துக்கொண்டிருக்கிறது. இந்த நெருப்புகள் ஒன்று இணைந்து பெரிய நெருப்பாக எரியும். அதிலிருந்து ஒருவன் வருவான்" என்று சீமான் கூறினர்.